அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பொறியாளர் பலி: சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை
திருச்சியில் பெண் பொறியாளர் ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பர்மா காலனியில் வசித்து வரும் குமாரமங்கலம் மகள் காயத்ரி (25). இவர் பி.இ.எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் படித்துள்ள நவல்பட்டு போலீஸ் காலனி பகுதியில் இயங்கி வரும் ஐ.டி பார்க்கில் உள்ள தனியார் கம்பெனியில் ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ்வாக கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வந்தார்.
இன்று காலை பணிக்குச் செல்வதற்காக காயத்ரி, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். நவல்பட்டு பர்மா காலனியிலிருந்து ஐ.டி பார்க் செல்லும் மேட்டுக்கட்டளை வாய்க்கால் ஆற்றங்கரை சாலையில் ஆர்டிஓ ஆபீஸ் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் காயத்ரி மீது பலமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த காயத்ரிக்கு தலையில் பலமாக அடிபட்டது.
அப்போது அவ்வழியாக வந்த ஐ.டி கம்பெனிக்கு சொந்தமான பேருந்தில் இருந்தவர்கள் உடனடியாக காயத்ரியை மீட்டு நவல்பட்டு பர்மா காலனியில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நவல்பட்டு போலீஸார், காயத்ரியின் உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற் கூராய்வுக்கு அனுப்பி வைத்ததுடன், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவ்வழியே சென்ற மற்றொரு இருசக்கர வாகனம் மற்றும் ஐ.டி பார்க் கம்பெனி ஊழியர்கள் பணிக்குச் செல்லும் பேருந்து அந்த நேரத்தில் அந்த வழியாக சென்றுள்ளது. இதில் ஏதாவது ஒரு வாகனம் இவர் மீது மோதியிருக்கலாம் என்று சந்தேகப்படும் போலீஸார் கண்காணிப்பு கேமிரா காட்சிகள் அடிப்படையிலும் மற்றும் அந்த வழியாக சென்றவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் கணினி மென் பொறியாளர் விபத்தில் உயிரிழந்திருப்பது நவல்பட்டு ஐடி பார்க், பர்மா காலனி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.