'வேலை நிலைக்குமா?' -விசித்திரக் கவலையில் மூன்றாவது குழந்தையைக் கொன்ற பெற்றோர்!

'வேலை நிலைக்குமா?'
-விசித்திரக் கவலையில் மூன்றாவது குழந்தையைக் கொன்ற பெற்றோர்!

அரசின் கொள்கை காரணமாக வேலை பறிபோய் விடுமோ என்ற கவலையில் தங்களது, 5 மாத சிசுவான மூன்றாவது குழந்தையைக் கால்வாயில் வீசி கொன்ற பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

உலக மக்கள்தொகையில் இரண்டாம் இடத்திலிருக்கும் இந்தியாவில், பல்வேறு மாநிலங்கள் பலவிதமான குழந்தைகள் கொள்கையை கடைபிடிக்கின்றன. குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகமுள்ள மாநிலங்கள் அவற்றை குறைக்கவும், குறைவாக உள்ள மாநிலங்கள் அவற்றை அதிகரிக்கவும் உரிய கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

உதாரணமாக சிக்கிம் மாநிலத்தில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்வோருக்கு என தனித்துவ சலுகைகளை அறிவித்துள்ளார்கள். அரசு ஊழியர்களில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ஊதிய உயர்வு, குழந்தை இல்லாதவர்களுக்கு செயற்கை கருத்தரித்தலுக்கு லட்சங்களில் நிதி உதவி உள்ளிட்டவை அங்கே அறிவிக்கப்பட்டுள்ளன.

மக்கள்தொகை அபரிமிதமாக உள்ள ராஜஸ்தான் மாநிலம் சிக்கிமுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ளது. இந்த மாநில அரசின் கொள்கையே, 5 மாத சிசுவை அதன் பெற்றோரே கொல்லவும் காரணமாகி இருக்கிறது.

ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தை சேர்ந்த ஜவர்லால் மேக்வால் என்பவர் அரசுத்துறை ஒன்றின் கீழ் ஒப்பந்த பணியாளராக உள்ளார். அண்மையில் பணி நிரந்தரமாவதற்கான பரிசீலனையில் ஜவர்லால் மேக்வாலின் பெயரும் சேர்ந்தது. இதனால் மகிழ்ச்சியடைய வேண்டிய ஜவர்லால் துயரத்தில் ஆழ்ந்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் 2 குழந்தைகள் கொள்கையின்படி, மூன்றாவது குழந்தை பெற்ற அரசு ஊழியருக்கு ஓய்வு அறிவிக்கப்படும். ஜவர்லால் வீட்டில் மூன்றாவது குழந்தை அண்மையில்தான் பிறந்திருந்தது. 5 மாத வயதாகும் அந்தக் குழந்தையால் தனது அரசுப் பணி கனவு பறிபோகுமோ என்று ஜவர்லால் தனது மனைவி கீதா தேவியிடம் புலம்ப ஆரம்பித்தார். கலந்து பேசிய இருவரும் கடைசியில் அந்த கொடூர முடிவை எடுத்தனர்.

அதன்படி குழந்தையை எடுத்துச்சென்று கால்வாய் ஒன்றில் வீசித் திரும்பினர். ஞாயிறு அன்று நடைபெற்ற இந்த சம்பவத்தை அடுத்து அன்றைய தினமே, 5 மாத குழந்தை இறந்த நிலையில் அப்பகுதி மக்களால் கண்டெடுக்கப்பட்டது. சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீஸார் திங்களனறு ஜவர்லால் மற்றும் மனைவி கீதா தேவியை கைது செய்தனர். கொலைக்குற்றம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in