கண் முன்னே அம்மாவை கொல்ல முயன்ற தந்தை; தடுக்க முயன்ற 17 வயது மகள் சுட்டுக்கொலை: போதையில் நடந்த விபரீதம்

கண் முன்னே அம்மாவை கொல்ல முயன்ற தந்தை; தடுக்க முயன்ற 17 வயது மகள் சுட்டுக்கொலை: போதையில் நடந்த விபரீதம்

குடிபோதையில் பிளஸ் 2 படிக்கும் மகளை தந்தையே துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் அபூபுர் கிராமத்தைச் சேர்ந்தவர் சைலேந்திரா. இவரது மனைவி அர்ச்சனா. இவர்களது மூத்த மகள் ஷாலினி(17, பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த சைலேந்திரா, அவரது மனைவி அர்ச்சனாவுடன் தகராறு செய்துள்ளார். அத்துடன் அவரை அடித்து உதைத்துள்ளார். இதை அவரது மகள் ஷாலினி தடுத்துள்ளார்.

இதனால் சைலேந்திரா, இரும்புக்கம்பியால் ஷாலினியை சரமாரியாகத் தாக்கினார். இதன் பின் வீட்டை விட்டு வெளியே சென்றவர் சிறிது நேரத்தில் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். கையில் இருந்த துப்பாக்கியால் ஷாலினியை நோக்கி மூன்று முறை சைலேந்திரா சுட்டுள்ளார். இதில் ஒரு தோட்டா தோளிலும், மற்றொரு தோட்டா மார்பிலும் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஷாலினி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதனால், அங்கிருந்து சைலேந்திரா தப்பியோடி விட்டார்.

இதுகுறித்து பரத்பூர் பஜேடா கிராமத்தில் வசிக்கும் ஷாலினியின் தாய்மாமன் லலித்திற்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர், காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தார். காவல் துறை அதிகாரி ராகவேந்திர சிங் தலைமையில் வந்த போலீஸார், ஷாலினியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான சைலேந்திரா, தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி, மகள்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதற்கு ஷாலினி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் அவரை சைலேந்திரா துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார். இக்கொலை சம்பவம் தொடர்பாக சைலேந்திரா, அவரது உதவியாளர் ராஜ்குமார் ஆகியோர் மீது போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in