
கேரளாவில் தன் சொந்த மகளையே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம், மலப்புரம் பகுதியில் திருக்குரான், அரபி மொழியைப் பயிற்றுவிக்கும் மதரஸா பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இங்கு ஆசிரியராக பணியாற்றி வந்தவருக்கு குடிப்பழக்கமும் இருந்து வந்தது. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அவரது 15 வயது மகள் வீட்டில் இருந்து இணைய வழியில் கல்வி பயின்றுவந்தார்.
அப்போது குடிபோதையில் வீட்டுக்கு வந்த சிறுமியின் தந்தை அவரை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். மகள் எதிர்க்கவே, இதை எதிர்த்தால் உன் தாயைக் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியே ஆறுமாதங்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
கடந்த ஆண்டு சிறுமி வயிற்று வலியால் அலறித்துடிக்கவே அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போதுதான் சிறுமி கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரியவந்தது. சிறுமி குழந்தை பெற்றும் எடுத்தார். அவருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ததில் சிறுமியை கர்ப்பமாக்கியது அவரது தந்தை என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தில் மதரஸா ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு கேரள மாநிலம் மஞ்சேரி விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் நேற்று மாலை தீர்ப்பு கூறப்பட்டது.
அதன்படி, பெற்ற மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு மூன்று ஆயுள் தண்டனையும், 6.6 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.