பெற்ற மகளைக் கழுத்தை அறுத்துக் கொன்று ஆற்றில் புதைத்த தந்தை: 5 நாட்களுக்குப் பிறகு உடல் கண்டுபிடிப்பு

ராஜ்குமார் சாஹ்னி
ராஜ்குமார் சாஹ்னி

மனைவி சமைக்காத ஆத்திரத்தில் தனது நான்கு வயது மகளை கழுத்தை அறுத்துக் கொன்று ஆற்றில் புதைத்த தந்தை ஐந்து நாட்களுக்குப் பின் போலீஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பிஹாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிஹார் மாநிலம் சரயூனி கிராமத்தில் உள்ள மாதேபுரா பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் சாஹ்னி. இவருக்கு சில்பா என்ற மனைவியும், தனுஜா(4) என்ற மகளும் இருந்துள்ளனர். ராஜ்குமாருக்கும், அவரது மனைவி ஷில்பாவிற்கும் அடிக்கடி குடும்பச்சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், உணவு சமைக்கவில்லையென்று தனது மனைவியை ராஜ்குமார் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதனால் அவரிடமிருந்து அடி பொறுக்க முடியாமல் சில்பா தப்பி தனது தாய் வீட்டிற்குச் சென்று விட்டார். இதனால் வீட்டில் மகள் தனுஜாவுடன் ராஜ்குமார் இருந்துள்ளார்.

இந்த நிலையில், தனுஜாவைப் பார்க்க அவரது தாத்தா சியாராம் ராஜ்குமார் வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால், தனுஜா வீட்டில் இல்லை. இதனால் ராஜ்குமாரிடம் குழந்தை எங்கே என சியாராம் கேட்ட போது, குழந்தையைக் கொன்று புதைத்து விட்டதாக ராஜ்குமார் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தனுஜாவின் தாத்தா, அவரது உறவினர்களிடம் தகவலைத் தெரிவித்தார்.

இதையடுத்து ஆற்றங்கரை முழுவதும் குழந்தையின் உடலைத் தேடினர். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து பஸ்னாஹி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து ராஜ்குமாரைப் பிடித்து விசாரித்த போது, மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தனது 4 வயது மகளை கழுத்தை அறுத்துக் கொலை செய்து புதைத்து விட்டதாக கூறினார்.

இதையடுத்து அவர் குழந்தையைப் புதைத்த இடத்தை போலீஸாரிடம் காட்டினார். அந்த இடத்தில் இருந்து கொலை செய்யப்பட்ட குழந்தையின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ராஜ்குமாரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையைக் கொலை செய்து புதைத்த தந்தை 5 நாட்களுக்குப் பிறகு கைதுசெய்யப்பட்ட சம்பவம் பிஹாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in