மகனின் சடலத்துடன் இரவில் 90 கிமீ பைக்கில் பயணம் செய்த தந்தை: கண்கலங்க வைக்கும் வீடியோ

மகனின் சடலத்துடன் இரவில் 90 கிமீ பைக்கில் பயணம் செய்த தந்தை: கண்கலங்க வைக்கும் வீடியோ

இறந்த மகனின் உடலை மருத்துவமனையில் இருந்து ஊருக்குக் கொண்டு செல்ல பணம் இல்லாததால், 90 கிமீ தூரத்திற்கு டூவீலரிலேயே தந்தை கொண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம், ராஜம்பேட்டை மாவட்டம் பெத்வேல் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மலு. தோட்டத் தொழிலாளி. இவரது மகன் ஜெசேவா (10). இவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. இதனால் தனது மகனை திருப்பதியில் உள்ள ரூயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக நரசிம்மலு சேர்த்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெசேவா இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் கண்ணீர் விட்டு கதறிய நரசிம்மலு, தனது மகன் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல முடிவெடுத்தார். அதற்காக மகனை சிகிச்சைக்காக சேர்த்த மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி கேட்டும், அவருக்கு கிடைக்கவில்லை.

இதன் காரணமாக தனியார் ஆம்புலன்ஸை அவர் அணுகியுள்ளார். அப்போது, சிறுவனின் உடலைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுநர் 20 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு பணவசதி இல்லாத நரசிம்மலு, தனது மகனின் உடலை திருப்பதியில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது சொந்த கிராமமான பெத்வேலுக்கு டூவீலரில் கொண்டு செல்ல முடிவு செய்தார்.

இதனால் தனது உறவினரிடம் டூவீலர் ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு வரச்சொன்னார். அப்படி கொண்டு வரப்பட்ட டூவீலரில் தனது மகனின் உடலை இரவு நேரத்தில் நரசிம்மலு தோளில் சுமந்தவாறு ஊருக்குக் கொண்டு சென்றார். அவரது உறவினர் டூவீலரை ஓட்டிச் சென்றார். இந்த சம்பவம் திருப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் காண்போரையும் கண் கலங்க வைத்தது.

இந்த சம்பவம் குறித்த வீடியோவை ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். தற்போது அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து சந்திரபாபு நாயுடு கூறுகையில், “திருப்பதி ரூயா மருத்துவமனையில் இறந்த அப்பாவி சிறுவன் ஜெசேவாவுக்காக என் இதயம் வலிக்கிறது. அவரது தந்தை, மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆம்புலன்ஸ் வசதி செய்து தரும்படி கெஞ்சியுள்ளார். ஆனால், அவர்கள் புறக்கணித்ததால் அவர் தனியார் ஆம்புலன்ஸை அணுகியுள்ளார். ஆனால், அவர்கள் கேட்ட தொகையைத் தர முடியாததால் வறுமையில் வாடும் நரசிம்மலு, வேறு வழியின்றி 90 கிலோமீட்டர் தூரம் தனது குழந்தையை டூவீலரில் துாக்கிச் சென்றுள்ளார். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் நிர்வாகத்தின் கீழ் சிதைந்து வரும் ஆந்திரப் பிரதேசத்தின் சுகாதாரக் கட்டமைப்புகளின் நிலையை பிரதிபலிப்பே இந்த இதயத்தை உலுக்கும் சோகம்” என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in