சவாரிக்கு அழைத்து ஆட்டோ டிரைவரைக் கொன்ற தந்தை, மகன் கைது: பின்னணி என்ன?

 ஆட்டோ டிரைவர் கொலை
ஆட்டோ டிரைவர் கொலை சவாரிக்கு அழைத்து ஆட்டோ டிரைவரைக் கொன்ற தந்தை, மகன் கைது: பின்னணி என்ன?

சவாரிக்கு அழைத்துச் சென்று ஆட்டோ ஓட்டுநரைக் கொலை செய்த தந்தை, மகனை போலீஸார் கைது செய்தனர். குடிப்பதற்குப் பணம் பறிக்கும் நோக்கத்தில் இந்தக் கொலைச் சம்பவம் நடந்தது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்துராஜ்(54). ஆட்டோ ஓட்டுநராக இருந்த இவர் சவாரிக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின்பு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கிறிஸ்துராஜின் மனைவி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

இந்தநிலையில், ஆசாரிபள்ளம் பகுதியில் ஒரு தோட்டத்தில் கிறிஸ்துராஜ் கடுமையாகத் தாக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் மயங்கிக் கிடந்தார். அங்கு சுயநினைவு திரும்பாமலேயே சிகிச்சை பெற்றுவந்த கிறிஸ்துராஸ் கடந்த 24-ம் தேதி உயிரிழந்தார்.

இந்தநிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை முன்பு கிறிஸ்துராஜின் உறவினர்கள் திரண்டனர். அவர்கள் சவாரி என அழைத்துச் சென்று கிறிஸ்துராஜ் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து கொல்லப்பட்டுள்ளார் எனவும் குற்றம்சாட்டினர். கிறிஸ்துராஜிக்கு கடைசிவரை சுயநினைவு திரும்பாததால் யார் அடித்தார் என்பதும் தெரியாமல் இருந்து வந்தது. இதில் சிசிடிவி கேமிராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் வடக்குக்கோணத்தைச் சேர்ந்த அருண்குமார், அவரது தந்தை தங்கராஜ் ஆகியோரை நேற்று இரவு கைது செய்தனர்.

இதில் கைதுசெய்யப்பட்ட அருண்குமார் வாக்குமூலத்தில், “கட்டிடத் தொழிலாளியாக உள்ளேன். மது அருந்த கிறிஸ்துராஜின் ஆட்டோவில் மதுக்கடைக்குச் சென்றேன். அங்கு இறங்கிவிட்டு சவாரிக் கட்டணத்தைக் கொடுத்தேன். அப்போது அவர் பர்ஸைத் திறந்து மீதிப் பணம் தந்தார். அப்போது அந்த பர்ஸில் நிறையப் பணம் இருப்பதைப் பார்த்தேன். அதை திருடும் நோக்கத்தில் மீண்டும் சவாரிக்கு அழைத்தேன். ஆட்டோ போய்க்கொண்டு இருக்கும்போதே நிறுத்தச் சொன்னேன். நிறுத்தியதும் அவரிடம் பர்ஸை எடுக்கச் சொன்னேன். அவர் எடுக்க மறுத்தார். இதனால் அவரது கழுத்தை நெரித்தேன். அவர் உடனே ஓடினார். துரத்திப் போய் ஒரு தோட்டத்தில் புகுந்த அவரைக் கீழே தள்ளி காலால் கழுத்தை மிதித்தேன். அவர் மயங்கியதும் பர்ஸை எடுத்துக்கொண்டு, என் அப்பா தங்கராஜ்க்கு போன் செய்தேன். அவர் பைக்கில் வந்து அழைத்துச்சென்றுவிட்டார். ஆட்டோ ஓட்டுநர் இறந்தது எனக்குத் தெரியாது”என்றார்.

பர்ஸைத் திருடும் நோக்கத்தில் ஆட்டோ ஓட்டுநரை சவாரிக்கு அழைத்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in