இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்!

எம்.எஸ்.சுவாமிநாதன்
எம்.எஸ்.சுவாமிநாதன்

பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்பட்ட பிரபல விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் இன்று காலையில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98.

விவசாய நாடு என போற்றப்படும் இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர் எம்.எஸ்.சுவாமிநாதன். இவர் 1925-ம் ஆண்டு கும்பகோணத்தில் பிரபல மருத்துவராக விளங்கிய சாம்பசிவன் – பார்வதி தங்கம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார்.

சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால், நெருங்கிய உறவினரான எம்.கே.நாராயணசாமியால் வளர்க்கப்பட்டார். தன்னைப் போலவே அவரையும் மருத்துவராக்க விரும்பினார் நாராயணசாமி. ஆனால், புகழ்பெற்ற திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் சேர்ந்து பி.எஸ்சி., விலங்கியலில் பட்டம் பெற்றார் எம்.எஸ்.சுவாமிநாதன்.

இந்நிலையில், வங்கத்தில் 1943-ல் ஏற்பட்ட பஞ்சத்தால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக வெளியான செய்தி, இவரது மனதை மிகவும் பாதித்தது. இதையடுத்து உணவு உற்பத்தி தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட முடிவெடுத்தார். இதையடுத்து, கோவை வேளாண் கல்லூரியில் இளநிலை பட்டமும், டெல்லியில் மரபணு பயிர்கள் குறித்த முதுநிலை பட்டமும் பெற்றார் சுவாமிநாதன். அப்போது இந்திய குடிமைப்பணித் தேர்வு எழுதி, ஐபிஎஸ் பணிக்குத் தேர்வானார். ஆனாலும், விவசாயத்தின் மீதான காதலால், அவர் ஐபிஎஸ் பணியை ஏற்கவில்லை.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், தாவரங்களின் விதை தொடர்பாக ஆய்வு செய்து 1950-ல் பிஎச்.டி பட்டம் பெற்றார் சுவாமிநாதன். முனைவர் பட்டத்துக்குப் பிந்தைய ஆராய்ச்சி மேற்கொள்ள, அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த சுவாமிநாதன், அங்கு உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை நிறுவிட பெரும் பங்காற்றினார். அப்போது அமெரிக்காவிலேயே எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பேராசிரியர் பணி கிடைத்தது. ஆனால், அதை மறுத்து 1954-ல் எம்.எஸ்.சுவாமிநாதன் நாடு திரும்பினார். டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் சேர்ந்து, பின்னர் அதன் இயக்குநராகவும் பொறுப்பேற்றார்

அரசுக்கு பல்வேறு திட்டங்களை வகுத்துக் கொடுத்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன். அதிக விளைச்சல் தரும் வீரிய ரகங்கள், திட்டமிட்ட முறையான நீர்ப்பாசனம், வீரியமிக்க பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகிவற்றின் ஒருங்கிணைந்த திட்டத்தால், 1970-களில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி, தேவையைவிட பல மடங்கு அதிகரித்தது. இதனால் நாட்டின் பொருளாதாரம் மட்டுமின்றி கவுரவமும் உயர்ந்தது. இதையடுத்து, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பல்வேறு அரசு பதவிகள் தேடி வந்தன. அந்தவகையில், 1979-1980-ல் மத்திய வேளாண் அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளராகவும் பதவி வகித்தார். 2007-ல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். உலக அளவிலும் எம்.எஸ்.சுவாமிநாதனின் திறமை அங்கீகரிக்கப்படுகிறது. 1981-1985-ல் அமெரிக்காவின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தலைவராகவும், 1982 முதல் 1988 வரை பிலிப்பைன்ஸில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

மத்திய அரசின் பத்மஸ்ரீ (1967), பத்மபூஷண் (1972), பத்மவிபூஷண் (1989) உள்ளிட்ட ஏராளமான விருதுகளை எம்.எஸ்.சுவாமிநாதன் பெற்றுள்ளார். மேலும், தனது பெயரில் சென்னையில் நிறுவிய ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம், தனது 98- வது வயதிலும் உணவு உற்பத்திக்காக உழைப்பை வழங்கி வந்தார் இந்த மூத்த விஞ்ஞானி. இவரது மூத்த மகள் டாக்டர் செளம்யா சுவாமிநாதன், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலை 11.20 மணியளவில் எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in