'இந்தாங்க மாப்பிள்ளை, வரதட்சணையாக புல்டோசரை வைச்சுக்குங்க': உ.பியில் நடந்த திருமணத்தில் சுவாரசியம்

'இந்தாங்க மாப்பிள்ளை, வரதட்சணையாக புல்டோசரை வைச்சுக்குங்க': உ.பியில் நடந்த திருமணத்தில் சுவாரசியம்

தனது மகளின் திருமணத்திற்கு மருமகனுக்கு புல்டோசரை மாமனார் பரிசளித்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள சுமேர்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட டெப்கானில் வசிப்பவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் பரசுராம் பிரஜாபதி. கடற்படையில் பணிபுரியும் சாய்கர் கிராமத்தைச் சேர்ந்த யோகேந்திராவிற்கும், பரசுராம் மகள் நேஹாவிற்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது.

சுமர்பூரில் உள்ள ஷிவ் கார்டனில் நடந்த இந்த திருமணத்தின் போது நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் மருமகன் யோகேந்திராவிடம் வரதட்சணையாக புல்டோசர் சாவியை பரசுராம் வழங்கினார்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் மற்றும் குற்றவாளிகளின் வீடுகளை புல்டோசர் மூலம் அகற்றி வருகிறார். இது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இதன் காரணமாக புல்டோசர் தற்போது அந்த மாநிலத்தில் அடையாளமாக மாறியுள்ளது. இந்த நிலையில், தனது மருமகனுக்கு புல்டோசரை மாமனார் வரதட்சணையாக வழங்கியுள்ளது அம்மாவட்டத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. பலூன்கள் கட்டப்பட்ட புதிய புல்டோசரை திருமணத்திற்கு வந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இதுகுறித்து மணப்பெண்ணின் தந்தை பரசுராம் பிரஜாபாதி கூறுகையில்," எனது மகளுக்கு சொகுசு காரை வரதட்சணையாக கொடுப்பதை விட வேறு எதாவது பயனுள்ளதாக வழங்க வேண்டும் என நினைத்தேன். தற்போது எனது மகள் சிவில் சர்வீஸ் தேர்விற்குத் தயாராகி வருகிறாள். அந்த தேர்வில் தோல்வியுற்றால் இந்த புல்டோசர் அவளது வாழ்வாதாரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைத்தேன். அதனால் வரதட்சணையாக புல்டோசரை வழங்கினேன்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in