30% தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த மகனும், பேத்தியும் உயிரிழப்பு: ஆவடியில் குடும்பமே பலியான சோகம்

30% தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த மகனும், பேத்தியும் உயிரிழப்பு: ஆவடியில் குடும்பமே பலியான சோகம்

30 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த மகனும், பேத்தியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தாய் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேர் பலியான சம்பவம் ஆவடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த கோவில்பதாகையை சேர்ந்தவர் ரோஜா (52). இவரது மகன் சங்கர்ராஜா. இவர் அதே பகுதி பிருந்தாவன் நகரில் டீக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி அனிதா. இவர்களது மகள் கீர்த்திகா (11), மகன் கவுதம் (9) அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 19-ம் தேதி இரவு ரோஜா சமையல் செய்வதற்காக காஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது, சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், ரோஜா, அவரது மகன் சங்கர் ராஜா மற்றும் சங்கர்ராஜாவின் மகள் கீர்த்திகா ஆகியோர் உடல் கருகினர். அனிதா மற்றும் அவரது மகன் கவுதம் மற்றொரு சமையல் அறையில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து ஆவடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். உடல் கருகிய ரோஜா உள்பட 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 80 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பலனின்றி ரோஜா கடந்த 20-ம் தேதி உயிரிழந்தார். 30 சதவீத தீக்காயத்துடன் மகன், பேத்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சங்கர் ராஜா, அவரது மகள் கீர்த்தனா ஆகியோர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in