மனைவியின் மனித நேயம்; பொறுத்துக்கொள்ள முடியாத கணவன்: விஷம் கொடுத்து குழந்தையை கொல்ல முயன்ற விபரீதம்

மனைவியின் மனித நேயம்; பொறுத்துக்கொள்ள முடியாத கணவன்: விஷம் கொடுத்து குழந்தையை கொல்ல முயன்ற விபரீதம்

மனைவியுடன் ஏற்பட்டத் தகராறில் இரண்டு வயது குழந்தையை கொலை முயன்ற தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், கீழகோடன்குளம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜ். கட்டுமானத் தொழிலாளி. இவருக்கும் பாண்டிச்சேரியை சேர்ந்த அபிஷா(23) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு எட்வின்(3), செல்லம்(2) என இரு ஆண்குழந்தைகள் உள்ளனர். குழந்தை செல்லத்திற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதற்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அபிஷா தர்மராஜிடம் பணம் கேட்டார். இதனால் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. இதனிடையே அபிஷா குளிக்கச் சென்றார். திரும்பிவந்து பார்த்தபோது குழந்தை செல்லம் விடாமல் அழுது கொண்டிருந்தான்.

அபிஷா காரணம் தெரியாமல் திணறியபோது, தர்மராஜ் தன் சொந்த மகன் என்றும் பாராமல் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் குழந்தை செல்லத்திற்கு எறும்பு பொடியைப் பாலில் கலந்து கொடுத்ததாகவும் அதைத்தானும் குடித்ததாகவும் சொன்னார். இதனைத் தொடர்ந்து இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சையில் தனக்கு உடல்நிலை சரியானதும் குடும்பத்தைப் பற்றி கவலைப்படாமல் தர்மராஜ் மருத்துவமனையை விட்டுச் சென்றுவிட்டார். இதுகுறித்து அபிஷா கொடுத்த புகாரின் பேரில் தர்மராஜை நாங்குநேரி போலீஸார் கைதுசெய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், “என் தாய் செல்வக்கனி வசதியாக இருக்கிறார். சொந்த வீடு, நிலபுலன்கள் உள்ளது. என் பங்கை இதுவரை பிரித்துக் கொடுக்காததால் நானும், அம்மாவும் பேச மாட்டோம். இந்நிலையில் என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. உடன் இருந்து என் தாயை கவனித்துக்கொள்ள அபிஷா சென்றார். இது பிடிக்காததால் குழந்தைக்கு எறும்புப் பொடி கொடுத்தேன்” எனத் தெரிவித்துள்ளார். பெற்ற குழந்தைக்கு தந்தையே எறும்புப் பொடிக் கொடுத்து கொல்ல முயன்ற இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in