ஏடிஎம்களில் ஸ்கிம்மர் கருவி, ரகசிய கேமரா: தந்தை, மகன் கூட்டு சேர்ந்து திருட்டு: அதிரடி காட்டியது போலீஸ்

மகன் ஆனந்த்குமார், தந்தை மனோகர்
மகன் ஆனந்த்குமார், தந்தை மனோகர்

ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி மற்றும் ரகசிய கேமராவை பொருத்தி வாடிக்கையாளர்களின் விவரங்களை திருடி பணத்தை கொள்ளையடித்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உடந்தையாக இருந்த மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை மைலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள ஐ.ஓ.பி வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வருபவர் பாரதிபிரியா(41). இவர் கடந்த 13-ம் தேதி மைலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், "மைலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் ஐஓபி வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. கடந்த 12-ம் தேதி வங்கி ஏடிஎம் இயந்திரம் பழுதடைந்து செயல்பட முடியாமல் இருந்தது. அதனால் டெக்னிக்கல் பிரிவு ஊழியர்கள் ஏடிஎம் மையத்திற்கு சென்று ஏடிஎம் இயந்திரத்தை பழுது பார்க்க சென்றனர். அப்போது யாரோ ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி மற்றும் ரகசிய கேமராவை பொருத்தி வங்கி வாடிக்கையார்களின் பணம் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை திருட முயற்சி செய்தது தெரியவந்தது. மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது 11-ம் தேதி ஏடிஎம் மையத்திற்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் மற்றும் ரகசிய கேமராவை பொருத்தி சென்றது பதிவாகி உள்ளது. எனவே அந்த நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

ஸ்கிம்மர் கருவி
ஸ்கிம்மர் கருவி

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இரு நபர்கள் இருசக்கர வாகனத்தில் ஏடிஎம்மிற்கு செல்வது போன்று பதிவாகி இருந்தது. இதையடுத்து சம்மந்தப்பட்ட நபரின் இருசக்கர வாகன பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் பழைய வண்ணாரப்பேட்டை மணிகண்டன் தெருவை சேர்ந்த மனோகர்(58) என்பது தெரியவந்தது. பின்னர் மனோகரை கைது செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. மனோகர் பழைய வண்ணாரப்பேட்டையில் சொந்தமாக துணிக்கடை நடத்தி நஷ்டம் அடைந்ததால் கடையை மூடியது தெரியவந்தது. மேலும் மனோகருடன் வந்த நபர் குறித்து விசாரித்த போது அந்த நபர் லிப்ட் கேட்டு வந்ததாக கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், மனோகரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மனோகர் தனது மகன் ஆனந்த்குமாருடன் சேர்ந்து கடந்த 11-ம் தேதி அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்து மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலை ஈஸ்ட் மாதா தெருவில் உள்ள வங்கி ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி மற்றும் ரகசிய கேமராவை பொருத்திவிட்டு மறுநாள் ஸ்கிம்மர் கருவியை ஆனந்த்குமார் எடுக்க வந்தபோது ஏடிஎம்மில் பொருத்திய ஸ்கிம்மர் கருவி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதைத் தொடர்ந்து மற்றொரு வங்கி ஏடிஎம்மில் பொருத்திய ஸ்கிம்மர் கருவியை எடுத்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனந்த்குமாரின் திட்டம் காவல்துறையினருக்கு தெரிந்ததை அறிந்து கொண்ட ஆனந்த்குமார் உடனே விமானம் மூலமாக டெல்லிக்கு தப்பிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைதான மனோகர்
கைதான மனோகர்

தலைமறைவான ஆனந்த்குமார் எம்.பி.பி.எஸ் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு டெல்லியில் மருத்துவர் ஒருவரிடம் பணியாற்றி வருவதும், ஆனந்த்குமாரின் செல்போன் எண்ணை வைத்து சைபர் க்ரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது ஹரியானாவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் ஹரியானா விரைந்துள்ளனர். இதே போல் ஆனந்த்குமார் பல்வேறு இடங்களில் வங்கி ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி வாடிக்கையாளரின் ரகசிய பாஸ்வேர்டை திருடி பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளார். ஆனந்த்குமாருக்கு பின்னால் ஏதேனும் நெட்வோர்க் கும்பல் உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி வாடிக்கையாளர்கள் விவரங்களை திருட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in