3 வயது மகளைத் தரையில் அடித்துக் கொடூரமாக கொன்ற தந்தை: கர்ப்பிணி மனைவி கண் முன் நடந்த துயரம்

3 வயது மகளைத் தரையில் அடித்துக் கொடூரமாக கொன்ற தந்தை: கர்ப்பிணி மனைவி கண் முன் நடந்த துயரம்

ஹைதராபாத்தில் 3 வயது மகளை கர்ப்பிணி மனைவி முன்பு தரையில் அடித்துக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள சைஃபாபாத் நகரைச் சேர்ந்தவர் பாசித்கான். இவரது மனைவி சனா பாத்திமா. இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், சனா பாத்திமா தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில், இவர்களது 3 வயது மகள் வீட்டில் உள்ள கழிவறையில் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தார். அங்கு வந்த பாசித்கான் கரண்டியால் அந்த குழந்தையைத் தலையில் அடித்துள்ளார். இதை அவரது மனைவி சனா தடுத்துள்ளார். ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் குழந்தையின் தலையைப் பிடித்து பாசித்கான் தரையில் மோதியுள்ளார். இதில் குழந்தை மயக்கமடைந்துள்ளது.

இதனால் பதறியடித்துக் கொண்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.இதன் பின் அந்த சிறுமி சைஃபாபாத்தில் உள்ள நிலூஃபர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர், அவர் உஸ்மானியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும், அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்து, வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சைஃபாபாத் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் பாசித் கானை கைது செய்தனர். இதுகுறித்து அவரது மனைவி சகினா பாத்திமாக கூறுகையில், "கடந்த 7-ம் தேதியன்று இந்த சம்பவம் நடைபெற்றது. கழிவறையில் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்த மகளை முதலில் என் கணவர் கரண்டியால் தாக்கினார். இதன் பின் வீட்டுத் தரையில் மோதினார். இதைத் தடுக்க முயன்ற என்னைக் கீழே தள்ளி விட்டார். அத்துடன் குழந்தையைத் தூக்கி வந்து தரையில் அடித்தார்" என்று கூறினார்.

எதற்காக பெற்ற குழந்தையை பாசித்கான் கொலை செய்தார் என போலீஸார் விசாரித்து வருகின்றனர். பெண் குழந்தை என்பதால் அடித்துக் கொன்றாரா என்ற வகையில் அவர்கள் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in