துணி உலர்த்தும் கொடியில் பாய்ந்தது மின்சாரம்: மனைவியைக் காப்பாற்றச் சென்ற கணவன், மகன் பலி

துணி உலர்த்தும் கொடியில் பாய்ந்தது மின்சாரம்: மனைவியைக் காப்பாற்றச் சென்ற கணவன், மகன் பலி

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே துணி காயப் போடும்போது மனைவி மீது மின்சாரம் பாய்ந்த நிலையில் அவரை காப்பாற்றச் சென்ற கணவர், மகன் இருவரும் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே  சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி பெரியம்மா,  மகன் மணிகண்டன். இன்று காலையில்  துணி துவைத்துக் கொண்டிருந்த ராமரின் மனைவி  பெரியம்மா, அதை அருகில் உள்ள இரும்பு கம்பியில் காயப்போட முயன்றார். அந்த இரும்பு கம்பியில் மின்சாரக் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த ஸ்டே கம்பியில் இருந்த மின்சாரம் பெரியம்மா மீது பாய்ந்தது.

இதனால்  அலறிய பெரியம்மாவின் குரலைக் கேட்டு அவரது கணவர் ராமர் மற்றும் மகன் மணிகண்டன் ஆகியோர் ஓடி வந்தனர். பெரியம்மாளை தள்ளிவிட முயன்ற ராமர் மீதும்,  அவரைப் பிடிக்க முயன்ற மணிகண்டன் மீதும் மின்சாரம் பாய்ந்தது.  இதில் சம்பவ இடத்திலேயே ராமரும், மணிகண்டனும் துடிதுடித்து  உயிரிழந்தனர்.  படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்ட பெரியம்மா  அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மனைவியைக் காப்பாற்ற  முயன்ற கணவரும், தாய், தந்தை இருவரையும்  காப்பாற்ற  முயன்ற மகனும்  மின்சாரம் தாக்கி  உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in