மகன் தூக்கில் தொங்கிய கயிற்றில் தந்தையும் தற்கொலை: இருவரின் உயிரையும் பறித்த செல்போன் கேம்

மகன் தூக்கில் தொங்கிய  கயிற்றில் தந்தையும் தற்கொலை:  இருவரின் உயிரையும் பறித்த செல்போன் கேம்

சென்னையில் செல்போனில் கேம் விளையாடுவதை தந்தை கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதனால் மனமுடைந்து தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்(40). கார்பென்டர் வேலை செய்து வந்த சுந்தருக்கு திருமணமாகி தினேஷ் குமார், நவீன் குமார், என்ற மகன்கள் இருந்தனர். நவீன் குமார் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் அளவுக்கு அதிகமாக செல்போனில் விளையாடுவதைப் பார்த்து அவரது தந்தை சுந்தர் கண்டித்துள்ளார்.

ஆனால், அதைப்பொருட்படுத்தாது செல்போனில் கேம் விளையாடி வந்துள்ளார். நேற்று வழக்கம் போல நவீன்குமார் செல்போனில் கேம் விளையாடுவதைப் பார்த்த அவரது தந்தை கண்டித்து விட்டு வேலைக்குச் சென்று விட்டார். இதனால் மனமுடைந்த நவீன்குமார் இரவு வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த சுந்தரின் மனைவி நவீன் குமார் அறையில் தூக்கில் பிணமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சுந்தருக்குத் தகவல் கொடுத்தார். இதன் பின் அக்கம்பக்கத்தினர் நவீன்குமார் உடலை இறக்கி வைத்து விட்டு குன்றத்தூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் வீட்டிற்கு ஒடிவந்த தந்தை சுந்தர் , நவீன்குமார் உடலை பார்த்து கதறி அழுததுடன் தன்னால் தான் மகன் இறந்து விட்டான் என்ற மனவேதனை அடைந்தார்.

மகன் இறந்த சோகம் தாங்காமல் திடீரென கத்தியால் தனது கையை அறுத்து கொண்ட சுந்தர் பின்னர் மகன் இறந்த அறைக்குள் சென்று மகன் தூக்கிட்டு கொண்ட அதே கயிற்றில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அங்கிருந்து உறவினர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சம்பவயிடத்திற்கு வந்த குன்றத்தூர் போலீஸார் தந்தை, மகன் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தை கண்டித்ததால் மகனும், மகன் இறந்த சோகம் தாங்காமல் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in