‘ஜி20 தலைமைப் பொறுப்பைப் பயன்படுத்தி உக்ரைன் போரை நிறுத்துவார் மோடி!’

நம்பிக்கை தெரிவித்த ஃபரூக் அப்துல்லா
‘ஜி20 தலைமைப் பொறுப்பைப் பயன்படுத்தி உக்ரைன் போரை நிறுத்துவார் மோடி!’

ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்தி உக்ரைன் போரைப் பிரதமர் மோடி நிறுத்துவார் என நம்புவதாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறியிருக்கிறார்.

உலகின் மிக முக்கியமான பொருளாதார நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி20 கூட்டமைப்பில், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு உறுப்பு நாடு தலைமைப் பொறுப்பை வகிக்கும். 2022-ம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பு இந்தோனேசியா வசம் இருந்தது. அந்நாட்டில் சமீபத்தில் நடந்துமுடிந்த ஜி20 மாநாட்டில், அந்தப் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. அதன்படி 2023-ல் ஜி20 மாநாட்டை இந்தியா நடத்தவிருக்கிறது.

இந்நிலையில், இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஃபரூக் அப்துல்லா, “ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நாடுகள் எதிர்கொள்ளும் சிரமங்களை இந்தியா சுமக்கும் என்று எடுத்துக்கொள்ளலாம். பொருளாதாரச் சூழலில் பெரும் நாசத்தை ஏற்படுத்தியிருக்கும் ரஷ்யா - உக்ரைன் போரைப் பிரதமர் மோடி வெற்றிகரமாக நிறுத்துவார் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

மேலும், “அண்டை நாடான பாகிஸ்தானுடன் பிரச்சினை இருப்பதால், அந்நாட்டுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். காஷ்மீர் இளைஞர்கள் மற்றும் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மத்திய அரசு சொல்வதெல்லாம் பொருத்தமானதாக எனக்குத் தெரியவில்லை. உண்மையைப் பேசுவதாலேயே நான் தேசவிரோதியாகச் சித்தரிக்கப்படுகிறேன்” என்றும் ஃபரூக் அப்துல்லா கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in