அறிவிக்கப்பட்ட நிவாரணம் போதாது: அறந்தாங்கியில் விவசாயிகள் போராட்டம்

அறந்தாங்கியில் நடைபெற்ற விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அறந்தாங்கியில் நடைபெற்ற விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணையத்தொகை  போதாது என்று கூறி கூடுதல் இழப்பீடு கேட்டு புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் விவசாயிகள் சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பருவம் தவறி பெய்த கனமழை காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்கள் விளைந்து முற்றிய நிலையில் இருக்கும் கீழே விழுந்து நீரில் மூழ்கி நாசமானது. இதற்கு அரசு நிவாரணம்  தர வேண்டும் என்று  விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

இதனையடுத்து பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு ஹெக்டேர்  ஒன்றுக்கு ரூபாய் 20,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார். ஏக்கருக்கு 30,000 செலவாகியுள்ளதாகவும் அதனால் நிவாரணத்தொகையை உயர்த்தி தரவேண்டும் என்று கேட்டு விவசாயிகள்  சங்கம் சார்பில் இன்று அறந்தாங்கியில் போராட்டம் நடைபெற்றது. 

தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில்  சுப்பிரமணியபுரம் பேருந்து நிலையம் அருகே ஒன்றிய செயலாளர் தண்டபாணி தலைமையில் கூடிய விவசாயிகள்  இந்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல், உளுந்து, கடலை உள்ளிட்ட  அனைத்து வகை பயிர்களுக்கும் உரிய இழப்பீடு தர வேண்டும் என்று கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in