வீராணம் நிலக்கரி திட்டத்துக்கு எதிர்ப்பு - கோட்டை முன்பு உண்ணாவிரதம்: விவசாயிகள் போராட்ட அறிவிப்பு

வீராணம் நிலக்கரி திட்டத்துக்கு எதிர்ப்பு - கோட்டை முன்பு உண்ணாவிரதம்: விவசாயிகள் போராட்ட அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் ஜனவரி 10ம் தேதியன்று சென்னையில் கோட்டை முன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்குடி தாலுகாக்களை உள்ளடக்கி வீராணம் நிலக்கரி எடுக்கும் திட்டத்துக்கான அனுமதியை மத்திய அரசின் கனிமவளத்துறை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதனையடுத்து  காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக கிணறுகள் அமைப்பதை தடுத்து நிறுத்துவதற்காக போராட்ட குழு அமைப்பு கூட்டம் காட்டுமன்னார்குடி வீராணம் ஏரிக்கரையில் இன்று  நடைபெற்றது. 

கூட்டத்தில் ஒருமித்த கருத்து அடிப்படையில் போராட்டக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. போராட்டக் குழுவிற்கு வீராணம் விநாயகமூர்த்தி தலைவராகவும், சிதம்பரம் சுரேஷ்குமார் செயலாளராகவும், மணிக்கொள்ளை ராமச்சந்திரன் பொருளாளராகவும் அன்பழகன் துணை தலைவராகவும் பாலமுருகன் துணை செயலாளராகவும் நியமிக்கப் பட்டனர். 20 பேர் கொண்ட போராட்டக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, "காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று 25 ஆண்டு காலம் போராடி பெற்ற உரிமை இன்றைக்கு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காவிரியில் வீராணம் ஏரி பாசன பகுதியில் மட்டும் 1.50லட்சம் ஏக்கர் விளைநிலங்களில் முப்போகம் விளைவிக்கப்படுகிறது. இதனை வாழ்வாதாரமாகக் கொண்டு 10 லட்சம் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். 

புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்குடி தாலுகாக்களை உள்ளடக்கிய இப்பகுதியில்  நிலக்கரி எடுப்பதற்கான ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். வீராணம் ஏரியை அபகரிப்பதற்கான முயற்சிகள் தொடங்கியிருக்கிறது. வீராணம் ஏரி மூலம் குடிநீர் பெற்று வரும் சென்னை மாநகரம் அதனை இழக்கும் பேராபத்து ஏற்பட உள்ளது. ஏரி முழுமையும் நிலக்கரி சுரங்கமாக மாற்றப்பட உள்ளது.

மூன்று தாலுக்கா மக்களும் ஒட்டுமொத்தமாக அகதிகளாக வெளியேற்றப்படுகிற பேராபத்து ஏற்பட்டிருக்கிறது.  2020ல் முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அஇஅதிமுக அரசு அறிவித்த காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் கொண்டு வரப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இதனைத் தொடர்ந்துதான்  சிதம்பரம், சீர்காழி பகுதியை உள்ளடக்கி பெட்ரோலிய மண்டலமாக அறிவித்து ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது.

இயற்கை எரிவாயு,  ஹைட்ரோ கார்பன், கச்சா மீத்தேன்,  நிலக்கரி எடுக்கும் திட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளது.  இந்நிலையில் இச்சட்டத்திற்கு முரணாக இந்த நிலக்கரி திட்டம்  மேற்கொள்ளப்படுகிறது. இதனை உடனடியாக  கைவிட வேண்டும். இதை  வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம்.  

தமிழக முதலமைச்சர் உடனடியாக வீராணம் நிலக்கரி திட்டத்தை கைவிடுவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். காவல்துறையை கொண்டு ஓடுக்கிவிட்டு ஆய்வு பணிகள் நடத்தலாம் என்பது ஏற்க இயலாது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற கிணறுகள் அமைத்து ஆய்வு செய்யும் பணிகளையும் உடனே நிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்த உள்ளோம். 

முதற்கட்டமாக வருகிற ஜனவரி 10 ம் தேதியன்று  சென்னை கோட்டை முன் மாபெரும் உண்ணாவிரதத்தை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் சட்டமன்ற கூட்டத் தொடர் நடக்கும் நேரத்தில் நடத்த உள்ளோம். 3 வது பருவ கொள்முதல் துவங்க உள்ள நிலையில் நடப்பாண்டு நெல் உற்பத்திக்கான இடுபொருள் விலை ஏற்றத்தையும், செலவுகள் பல மடங்கு உயர்ந்திருப்பதை கருத்தில் கொண்டு குவிண்டால் 1க்கு ரூ 3000ம், கரும்பு டன் 1க்கு 4500ம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் உள்ளடக்கி இப்போராட்டம் நடைபெற உள்ளது. 

போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தமிழகம் முழுமையிலும் இருந்து பங்கேற்க உள்ளார்கள். 

குடியரசு தின விழா  கிராமசபா கூட்டங்களில் ஊராட்சிகள் தோறும் இத்திட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்ற வலியுறுத்துகிறோம். ஒவ்வொரு கிராமத்திலும் நிலக்கரி எடுக்கும் பேரழிவு திட்டத்திற்கு எதிராக எங்கள் நிலங்களை கொடுக்க மாட்டோம் என நிலங்கொடா இயக்கம் தொடங்க உள்ளோம்" என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in