முகக்கவசம், கையுறை, பாதுகாப்பு உடைகள்: கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை கடந்து செல்ல விவசாயிகள் அதிரடி!

பாதுகாப்பு கவசங்களுடன் விவசாயிகள்
பாதுகாப்பு கவசங்களுடன் விவசாயிகள்

மத்திய அரசுடனான 4 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இன்று டெல்லி சலோ பேரணி மீண்டும் துவங்குகிறது. போலீஸாரின் தாக்குதலை எதிர்கொள்ள விவசாயிகள் பாதுகாப்பு கவசங்களுடன் ஆயத்தமாகியுள்ளனர்.

வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ அங்கீகாரம், விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் 'டெல்லி சலோ' பேரணியை துவங்கினர்.

இப்பேரணியை சம்யுக்தா கிசான் மோர்ச்சா (கட்சி சார்பற்றது), கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட அமைப்புகள் முன்னின்று நடத்துகின்றன. இப்பேரணியில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் 1200-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல புறப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு கவசம் அணியும் விவசாயி
பாதுகாப்பு கவசம் அணியும் விவசாயி

போராட்டம் தொடங்கிய முதல் நாளே பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் எல்லைப் பகுதியான ஷம்பு பகுதியில் போலீஸாரால் கண்ணீர் புகைக்குண்டு வீசி, விவசாயிகள் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது. இதற்கிடையே இதுவரை மத்திய அரசு, விவசாயிகள் இடையே 4 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. குறிப்பாக, 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் (எம்எஸ்பி) அபருப்பு வகைகள், மக்காச்சோளம் மற்றும் பருத்தி ஆகியவற்றை வாங்குவதாக கூறிய மத்திய அரசின் பரிந்துரையை விவசாயிகள் நிராகரித்தனர். இந்நிலையில், 9 நாள்களுக்குப் பிறகு, 21ம் தேதி முதல் டெல்லியை நோக்கிய பேரணி மீண்டும் துவங்கும் எனவும் விவசாயிகள் அறிவித்தனர்.

பேரணியை தடுக்க போலீஸார் அமைத்துள்ள தடுப்புகள்
பேரணியை தடுக்க போலீஸார் அமைத்துள்ள தடுப்புகள்

இதையடுத்து மூன்று எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கையாக இருக்குமாறு டெல்லி போலீஸார் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், விவசாயிகள் பேரணி காரணமாக போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ள நேரிடலாம் என்று வாகன ஓட்டிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லி, ஹரியாணாவின் எல்லை பகுதிகளான திக்ரி, சிங்கு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் துணை ராணுவப் படைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. கான்கிரீட் மற்றும் இரும்பு ஆணிகளின் பல அடுக்கு தடுப்புகளுடன் எல்லைப் பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.

காசிப்பூர் எல்லையின் இரண்டு வழித்தடங்களும் பல அடுக்கு தடுப்புகள் மற்றும் போலீஸார் கொண்டு மூடப்பட்டுள்ளது. இதற்கிடையே போலீஸார் மீண்டும் கண்ணீர் புகைக்குண்டு வீசினால் அதில் இருந்து தடுத்துக் கொள்வதற்காக விவசாயிகளுக்கு முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் பாதுகாப்பு உடைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மேலும் போலீஸாரின் தடுப்புகளை அகற்ற, டிராக்டர்களில் கருவிகளையும் விவசாயிகள் பொருத்தியுள்ளனர். இதனால் விவசாயிகளின் டெல்லி அணிவகுப்பு போராட்டம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in