செப்டம்பர் 27 முழு அடைப்பு அமைதியாக நடைபெறும்! - விவசாயிகள் அமைப்பு உத்தரவாதம்

வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு
செப்டம்பர் 27 முழு அடைப்பு அமைதியாக நடைபெறும்! 
- விவசாயிகள் அமைப்பு உத்தரவாதம்

வேளாண் சட்டங்களை அரசு முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, செப்.27-ம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்பு நடத்தவிருக்கும் ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ (எஸ்கேஎம்), இந்தப் போராட்டம் அமைதியாகவும் மக்களுக்கு இடையூறு இல்லாதவிதத்திலும் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இரு தரப்பும் பிடிவாதம்; இழுபறி

விவசாயிகள், குறிப்பாக சிறு விவசாயிகளின் நலனைக் காக்கத்தான் இந்த விவசாய சீர்திருத்தச் சட்டங்கள் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், உணவு தானியக் கொள்முதலை அரசிடமிருந்து தனியாருக்கு, அதிலும் பெரு நிறுவனங்களுக்குக் கைமாற்றிவிடத்தான் இந்தச் சட்டங்கள் என்று விவசாயிகள் கூறுகின்றனர். குறைந்தபட்ச கொள்முதல் விலை என்கிற நடைமுறையைக் காலப்போக்கில் கைவிடத்தான் இந்தச் சட்டங்கள் உதவும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர். அரசும் விவசாயிகள் தரப்பும் 10 முறை சந்தித்துப் பேசியும் இருதரப்பும் பிடிவாதம் பிடிப்பதால், தீர்வு ஏற்படாமலேயே முட்டுக்கட்டை நிலை நீடிக்கிறது.

இதையடுத்து நாடு தழுவிய முழு அடைப்புக்கு சம்யுக்த கிசான் மோர்ச்சா சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், முழு அடைப்பை எப்படி நடத்த வேண்டும் என்று உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இன்று (செப்.18) வழிகாட்டு நெறிமுறைகளைத் தெரிவித்திருக்கிறது.

காலை 6 முதல் மாலை 4 மணி வரை

இதுகுறித்து சம்யுக்த கிசான் மோர்ச்சா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், மார்க்கெட்டுகள், கடைகள், தொழிற்சாலைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அன்றைக்குச் செயல்பட அனுமதிக்க முடியாது. காலை 6 முதல் மாலை 4 மணி வரையில் போராட்டம் நடைபெறும். சாலைகளில் அரசு, தனியார் வாகனங்கள் பந்த் நேரத்தில் ஓட அனுமதிக்கமாட்டோம். பொது நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இல்லை. ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் மட்டும் அந்த நேரத்தில் செயல்பட அனுமதிப்போம்

முழு அடைப்புக்கு மக்களிடையே ஆதரவைப் பெறுவதற்கு, செப்.20-ம் தேதி மும்பையில் மாநில அளவு ஆயத்த கூட்டம் நடைபெறும். உத்தரப் பிரதேசத்தின் சீதாபூரில் அதேநாளில் விவசாயத் தொழிலாளர்களின் மகாபஞ்சாயத்து நடைபெறும். உத்தராகண்டின் ரூர்க்கியில் செப்.22-ல் கிசான் மகாபஞ்சாயத்து நடத்தப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

“அரசாங்கத்தின் பிடிவாதம் காரணமாகத்தான் விவசாயிகள் கடந்த நவம்பரிலிருந்து தொடர்ந்து பல மாதங்களாக வெயில், மழை, பனி, குளிர் என்று அனைத்தையும் சகித்துக்கொண்டு போராட்டத்தைத் தொடர்கின்றனர். விவசாயிகள் எல்லையிலேயே தொடர்ந்து தங்க வைக்கப்படுவதற்கு மத்திய உள் துறையும் சில மாநிலங்களின் காவல் துறையும்தான் காரணம்” என்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சா குற்றம்சாட்டியிருக்கிறது.

Related Stories

No stories found.