நிவாரணம் கேட்டு போராடிய விவசாயிகள்; ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

நிவாரணம் கேட்டு போராடிய விவசாயிகள்; ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் உடனடியாக வழங்கக்கோரி இன்று கொள்ளிடத்தில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலால் சிதம்பரம் - மயிலாடுதுறை தேசிய நெடுஞ்சாலையில் வெகு தொலைவிற்கு வாகனங்கள் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டது. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் 11-ம் தேதி என்று பெய்த அதீத கனமழையின் விளைவாக (ஒரே நாளில் 44 சென்டிமீட்டர்) சீர்காழி தரங்கம்பாடி ஆகிய இரண்டு தாலுகாக்களிலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. விவசாய பயிர்கள்  அழுகி நாசமாகின. 

அதையடுத்து உடனடியாக சீர்காழிக்கு விரைந்து வந்த முதல்வர் ஸ்டாலின், பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன்,  விளை நிலங்களையும் பார்வையிட்டு அளிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் ஒரு மாதம் கடந்து விட்ட நிலையிலும் விவசாயிகளுக்கான நிவாரணம் எதுவும் அறிவிக்கப்படவில்லை வழங்கப்படவில்லை. 

இதன் காரணமாக ஏமாற்றம் அடைந்துள்ள விவசாயிகள் கடந்த மாதம் 26-ம் தேதி அன்று தமிழக தமிழக காவிரி விவசாய சங்கத்தின் சார்பில் சீர்காழியில்  ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா இதுகுறித்து  அரசிடம் தெரிவித்து விவசாயிகளுக்கு விரைவில் உரிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்திருந்தார். 

ஆனால் அதன் பிறகு 20 நாட்கள் கடந்தும் இன்னமும் அரசு தரப்பில் இருந்து நிவாரணம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதனால் அதிருப்தியிலும் ஆத்திரத்திலும் இருந்த விவசாயிகள் அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் இன்று கொள்ளிடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் கடைவீதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம் தொடர்ந்த நிலையில் நெடுஞ்சாலையின் இருபுறமும் சுமார் 4 கிலோ மீட்டர் அளவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.  ஆனாலும் அரசு தரப்பில் இருந்து அதிகாரிகள் யாரும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த முன் வரவில்லை. இந்த நிலையில் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள்,  பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாவதை  உணர்ந்த பி.ஆர்.பாண்டியன் தற்காலிகமாக சாலை மறியலை கைவிட்டார்.

இதன் காரணமாக 2 மணி நேரத்திற்கு மேலாக தடைப்பட்டிருந்த போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.  அதே நேரத்தில் 'இன்று மாலை மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில்  போக்குவரத்திற்கு தடை ஏற்படாதவாறு சாலை மறியலை  தொடர்வது என்றும்,  மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள்  நேரில் வந்து உத்தரவாதம் அளிக்காத வரையில் போராட்டத்தை கைவிடப் போவதில்லை'  என்றும் பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in