`ஈரப்பதம் அளவை உயர்த்துங்கள்; தார்ப்பாய் வழங்கவும்' - அரசிடம் முறையிடும் விவசாயிகள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்த விவசாயிகள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்த விவசாயிகள்

நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும், நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் தார்ப்பாய்கள் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை தமிழக அரசிடம் விவசாயிகள் முன் வைத்திருக்கிறார்கள்.

இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12க்கு முன்பாகவே திறக்கப்பட்டு விட்டதால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. அதிக அளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்திருந்தனர். அவை தற்போது விளைந்து அறுவடை செய்யும் நிலையில் உள்ளன. ஆனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பயிர்கள் நன்கு விளைந்த நிலையில் மழையால் சாய்ந்தும், நீரில் மூழ்கியும் வீணாகியிருக்கின்றன.

இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கொள்முதல் நிலையங்களில் தற்போது வாங்கப்படும் ஈரப்பத அளவை உயர்த்தி கூடுதலாக ஈரப்பதத்தோடு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதாவைச் சந்தித்த விவசாயிகள் சங்கத் தலைவர் ஆறுபாதி கல்யாணம், குரு கோபி கணேசன் உள்ளிட்ட விவசாயிகள் ஆட்சியர் மூலமாக அரசுக்கு சில கோரிக்கைகளை முன் வைத்திருக்கின்றனர்.

சென்றாண்டு திறக்கப்பட்ட அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் உடனடியாக திறக்கப்பட வேண்டும், நவீன எடை மிஷின் விவசாயிகள் பார்வையில் தெளிவாக தெரியும்படி அமைக்கப்படுதல் வேண்டும், தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்லின் ஈரப்பதம் 17 என்பதை 21 ஆக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கொள்முதல் நிலையங்களில் ட்ரயர் எனப்படும் ஈரப்பத உலர்த்தியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

மழை நேரங்களில் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் நனையாமல் இருக்க விவசாயிகளுக்கும் பாலித்தீன் படுதாக்கள் கொடுக்கப் படவேண்டும், பில்லேஜ் நெல் எடுப்பதை தடுக்க வேண்டும், விவசாயிகளிடம் இருந்து பணம் வாங்கும் பட்டியல் எழுத்தர், உதவியாளர், லோடு மேன்கள் ஆகியோரை அந்த இடத்திலேயே பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,

லாரி, டாரஸ் போன்ற வாகனங்களுக்கு கொடுக்கப்படும் மாமுலை நிறுத்தவேண்டும், கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல்லை ஏற்றிச் செல்வதற்கு லாரி, டாரஸ் மட்டுமல்லாமல் டிராக்டர் போன்ற எட்டு டன்னுக்கும் குறையாத திறனுடைய வாகனங்களையும் பயன்படுத்த வேண்டும், கொள்முதல் செய்யப்படும் நெல் சிப்பங்கள் இரண்டு தினங்களுக்கு மேல் தங்காமல் ஏற்றிச் செல்ல வேண்டும்.

அறுவடை இயந்திரங்களுக்கு 50 சதவீத டீசல் மானியம் தர வேண்டும்,தொடர்ந்து மழை பெய்து பாதிக்கப்பட்டுள்ள குருவை பயிர்களுக்கு நிவாரணம் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவாக அளிக்கப்பட்டன. இயன்றவரை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர், முதுநிலை மண்டல மேலாளர் உள்ளிட்டவர்கள் உறுதி அளித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in