
ஈரப்பதத்தை காரணம் காட்டி நெல் கொள்முதல் செய்யாமல் இருப்பதை கைவிட வேண்டும். சென்ற ஆண்டு திறக்கப்பட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என மாநில உணவுத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணனிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.
தமிழக அரசின் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை முதன்மை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் மற்றும் கூட்டுறவு கடன் வழங்குவது குறித்தான கள ஆய்வை மேற்கொண்டு வருகிறார். அதன்படி திருவாரூர் மாவட்டம் கச்சனம் கிராமத்தில் அவர் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் விவசாயிகள் அவரை நேரில் சந்தித்து கொள்முதல் பாதிப்புக்கள் குறித்து தங்களது குறைகளையும், ஆலோசனைகளையும் எடுத்துரைத்தனர்.
' தற்போது நிரந்தர கட்டிடங்கள் உள்ள கிராமங்களில் மட்டுமே கொள்முதல் நிலையம் திறப்பதற்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அங்கேயும் இதுவரையிலும் ஈரப்பதம் காரணம் காட்டி கொள்முதல் துவங்கப்படவில்லை. எனவே, நடப்பாண்டு குறுவை சாகுபடி பரப்பளவு கூடியுள்ளதால் சென்ற ஆண்டைவிட கூடுதல் இடங்களில் உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறந்து 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். அதற்கான அனுமதியை மத்திய அரசிடம் உடனடியாக பெற வேண்டும்.
காவிரி நீர் திறக்கப்பட்ட பிறகு சாகுபடி செய்யப்பட்ட சுமார் 4 லட்சம் ஏக்கரிலான பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன. அவை அக்டோபர் 20-ம் தேதிக்குள்ளாக அறுவடை முடித்து நெல் முழுவதையும் விற்பனை செய்தாக வேண்டும். அதற்கான வகையில் திட்டமிட்டு கொள்முதலை தீவிரப்படுத்தாவிட்டால் கொள்முதல் நிலைய வாயில்களிலேயே நெல் கொட்டி வைக்கப்பட்டு முளைத்து வீணாகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் சார்பில் பி.ஆர்.பாண்டியன் எடுத்துரைத்தார்.
'கூட்டுறவு வங்கிகளில் நிலப்பரப்பு அடிப்படையில் தமிழகம் முழுமையிலும் மாவட்டங்களுக்கு கடன் கொடுப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். காவிரி டெல்டாவில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கென தனி மத்திய கூட்டுறவு வங்கிகள் துவங்கப்பட வேண்டும். டிஏபி, யூரியா உள்ளிட்ட உரங்கள் மிகப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஸ்பிக் நிறுவனத்தின் மூலம் கூட்டுறவு நிறுவனங்களில் உரவிற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு சில்லறையில் உரம் விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும், கடன் பெறும் விவசாயிக்கு மட்டுமே உரம் வழங்குவது என்பது பயனளிக்காது' என்றும் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் எடுத்துரைத்தனர்.
இவற்றை செவிமடுத்த உணவு மற்றும் கூட்டுறவு துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், "விவசாயிகளின் இந்த கோரிக்கைகள் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும். டெல்டாவில் சென்றாண்டை விட கூடுதலான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.
தேவையான இடங்களில் உரிய பாதுகாப்புடன் திறந்தவெளி கிடங்குகள் ஏற்படுத்தப்படும். எந்த வகையிலும் கொள்முதல் தடையின்றி செய்வதற்கு தமிழக அரசின் சார்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் கருத்துக்களின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்களோடு கலந்து பேசி கொள்முதல் தடையின்றி நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்யும்" என்று பதிலளித்தார்.