பொங்கல் பரிசுக்கு கரும்பை கொள்முதல் செய்யுங்கள்: அரசை வலியுறுத்தி பிச்சை எடுத்து போராடிய விவசாயிகள்

பொங்கல் பரிசுக்கு கரும்பை கொள்முதல் செய்யுங்கள்: அரசை வலியுறுத்தி பிச்சை எடுத்து போராடிய விவசாயிகள்

பொங்கல் பரிசுக்காக விவசாயிகள் பயிரிட்டுள்ள  கரும்பை அரசு கொள்முதல் செய்ய வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்தாண்டு வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு  தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட பொங்கல்  பரிசுத் திட்டத்தில் கரும்பும் வழங்கப்பட்டு வந்தது. அத்துடன் பொங்கல் செய்வதற்கு தேவையான  மளிகை பொருட்களும் சேர்த்து வழங்கப்பட்ட நிலையில் அதில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதனால் இந்த ஆண்டு உங்களுக்கு ரூபாய் ஆயிரம் பணத்துடன் அரிசியும் வெல்லமும் மட்டுமே வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் பொங்கல் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். உற்பத்தி செய்துள்ள கரும்பை எப்படி விற்பது என்று தெரியாமல் அவர்கள் கவலையில்  ஆழ்ந்துள்ளனர். எனவே  மீண்டும் பொங்கல் பரிசுக்காக தங்களிடமிருந்து கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு, குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1,000 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் பன்னீர் கரும்பை சாகுபடி செய்துள்ளனர். இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் பன்னீர் கரும்பு வழங்கப்படவில்லை எனத் தெரிந்ததும் இந்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதனால் இன்று  500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடலூர் அருகே உள்ள குள்ளஞ்சாவடியில்  ஒன்று திரண்டு  கரும்புடன் கடலூர்- விருத்தாசலம் சாலையில் மறியல் செய்தனர். 

மேலும், விவசாயிகள் சாலையிலேயே சமையல் செய்து சாப்பிட்டும், பட்டைநாமம் போட்டுக் கொண்டும்,  தட்டை வைத்துக் கொண்டு பிச்சை எடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அங்கு 500-க்கும் மேற்பட்ட போலீஸார் வரவழைக்கப்பட்டு  விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  ஆனாலும் விவசாயிகள் கலைந்து செல்லவில்லை. அதையடுத்து கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன்  நேரில் வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சுமார் 4 மணி நேரம் நடந்த போராட்டத்தின் இறுதியில் விவசாயிகளின் கோரிக்கை அரசிடம் தெரியப்படுத்தப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் உறுதி அளித்ததைத்  தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால்  கடலூர் - விருத்தாசலம் சாலையில் நான்கு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in