மீண்டும் வெடிக்கும் விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் பரபரப்பு!

மீண்டும் வெடிக்கும் விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் பரபரப்பு!

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் இன்று நடத்தும் போராட்டத்தை ஒட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. பல மாதங்களுக்குப் பின்னர் பெரிய அளவில் போராட்டம் நடக்கவிருக்கும் நிலையில், அசம்பாவிதங்களைத் தடுக்க டெல்லியின் எல்லைப் பகுதிகளில் கடும் வாகன சோதனை நடத்தப்படுகிறது. விவசாயிகளின் கோரிக்கைகள் என்னென்ன?

குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக மத்திய அரசு அமைத்த குழுவின் முதல் கூட்டம், இன்று காலை 10.30 மணிக்கு டெல்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகம் (என்.ஏ.எஸ்.சி) கட்டிடத்தில் நடைபெறுகிறது. விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிஸான் மோர்ச்சா (எஸ்கேஎம்), இந்தக் குழுவை ஏற்க மறுத்துவிட்டது. இதில் அங்கம் வகிக்கப்போவதில்லை என்றும் அறிவித்துவிட்டது. இந்தக் குழுவே ஒரு கேலிக்கூத்து என்றும், விவசாயிகளுக்கு எதிரானது என்றும் விவசாய அமைப்புகளின் தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்துவருகின்றனர். பயிர்களுக்கு நியாயமான முறையில் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திவருகின்றனர்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய மாபெரும் போராட்டத்தைத் தொடர்ந்து, அந்தச் சட்டங்களை பிரதமர் மோடி திரும்பப் பெற்றார். எனினும், அதன் தொடர்ச்சியாக அரசு அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என விவசாய அமைப்புகள் கருதுகின்றன. வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போடப்பட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்தப் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவை வலியுறுத்திவருகின்றன.

அத்துடன் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட ஆசிஷ் மிஸ்ராவின் தந்தையும், மத்திய அமைச்சருமான அஜய் மிஸ்ரா பதவிநீக்கம் செய்யப்பட்டு, கைதுசெய்யப்பட வேண்டும் என்றும் விவசாய அமைப்புகள் கோரி வருகின்றன. லக்கிம்பூர் கெரியில் பாரதிய கிஸான் யூனியன் (பிகேயூ) அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தலைமையில், ஆகஸ்ட் 18 முதல் 75 மணி நேரத்துக்குத் தொடர் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், விவசாயிகள் பங்கேற்கும் போராட்டம் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, சிங்கு, டீக்ரி, காஸிப்பூர் என டெல்லி எல்லைப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. வாகனங்கள் கடும் சோதனைக்குட்படுத்தப்படுவதால் போக்குவரத்தும் ஸ்தம்பித்திருக்கிறது. எனினும், ஏற்கெனவே டெல்லிக்குள் நுழைந்திருக்கும் ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

’மகாபஞ்சாயத்’ எனும் பெயரில் இன்று நடக்கும் இந்தப் போராட்டத்தில், சம்யுக்த் கிஸான் மோர்ச்சா (எஸ்கேஎம்) கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொள்கின்றனர். வழக்கமான கோரிக்கைகளுடன், வேலைவாய்ப்பின்மைக்குத் தீர்வு காண வேண்டும், உலக வர்த்தக அமைப்பிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் விவசாயிகள் முன்னெடுத்திருக்கிறார்கள்.

இதற்கிடையே, இந்தப் போராட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல முயன்ற ராகேஷ் திகைத் நேற்று கைதுசெய்யப்பட்டு, சற்று நேரத்தில் திருப்பி அனுப்பப்பட்டார். இதனால் இன்றைய போராட்டத்தில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. இதையடுத்து, இறுதி மூச்சு இருக்கும்வரை போராடவிருப்பதாக ட்வீட் செய்த அவர், மத்திய அரசின் கைப்பாவையாக டெல்லி போலீஸ் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

செப்டம்பர் 6-ல் சம்யுக்த் கிஸான் மோர்ச்சா அமைப்பின் தலைவர்களைச் சந்தித்து, போராட்டத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து பேசவிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in