காவிரி மேலாண்மை ஆணையம் முற்றுகை: கர்நாடக அரசிற்கு எதிராக டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்

காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் விவசாயிகள்
காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் விவசாயிகள்

மேகேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசின் சார்பில் அளிக்கப்பட்ட ஆய்வறிக்கை குறித்து விவாதம் நடத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தை தமிழக விவசாயிகள் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மேகேதாட்டு அணை கட்டுவதற்கான வரைவுத் திட்ட அறிக்கையை சட்டவிரோதமாக மத்திய அரசு கொடுத்த அனுமதியின்பேரில் கர்நாடகம் தயார் செய்துள்ளது. அவ்வறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் எதிர்வரும் 23- ம் தேதியன்று நடைபெற உள்ள ஆணையக் கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் போவதாக தெரிவித்தது. அதற்கு தமிழக அரசின் சார்பிலும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கர்நாடகத்தின் ஆய்வறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

போராட்டத்தில் விவசாயிகள்
போராட்டத்தில் விவசாயிகள்

தங்கள் அறிவித்தவாறு டெல்லி ஆர்.கே புரத்தில் உள்ள காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகத்தை தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது, மத்திய அரசு எந்த நிலையிலும் கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
அதன்பின்னர் காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகத்தின் உள்ளே சென்று அங்கிருந்த ஆணைய உறுப்பினர் கோபால்ராயிடம் மேகேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடகாவின் வரைவு திட்ட அறிக்கையை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடாது என்பதை வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in