காவிரி மேலாண்மை ஆணைய தலைவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் !

போராட்டம் நடத்தியவர்கள்
போராட்டம் நடத்தியவர்கள்

காவிரியில் தமிழ்நாட்டில் உள்ள அணைகளைப் பார்வையிடுவதற்காக இன்று கல்லணைக்கு வரும் காவிரி மேலாண்மை ஆணைய தலைவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தை அண்மைக்காலமாக கர்நாடக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதற்கான வரைவுத் திட்ட அறிக்கையை தயாரித்து வழங்கி மத்திய அரசின் சம்மதத்தை கோரியிருக்கிறது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக உள்ள எஸ்.கே. ஹல்தர் தெரிவித்திருந்தார்.

இதற்கு தமிழகம் சார்பில் மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து 17-ம் தேதி நடைபெற இருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 23- ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அணைகளைப் பார்வையிடுவதற்காக ஹல்தர் தமிழகம் வந்திருக்கிறார்.

நேற்று பீலிகுண்டு பகுதியைப் பார்வையிட்ட அவர் இன்று ( ஜூன் 17) முற்பகல் மேட்டூர் அணை மற்றும் சரபங்கா கால்வாய்த் திட்டம் ஆகியவற்றைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து மாலையில் கல்லணையைப் பார்வையிட வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கல்லணைக்கு வரும் அவருக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு முன்பே அறிவித்திருந்தது. அறிவித்தவாறு இன்று கல்லணையில் திரண்ட மீட்பு குழுவினர் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஹல்தருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"அவர் நடுநிலை தவறியவர், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே துச்சமாக புறக்கணிக்கக்கூடியவர். காவிரி ஆணையக் கூட்டத்தின் வழியாக ஒரு தடவைகூட கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய காவிரி நீரை பெற்றுத் தராதவர். அதற்கான முயற்சியில் ஈடுபடாதவர். கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை காலத்தில் கூட இந்த ஹல்தர் தமிழ்நாட்டுப் பக்கம் எட்டிப் பார்த்ததில்லை.மேகேதாட்டு திட்டத்திற்கு ஆணையம் அனுமதி கொடுப்பதற்கு எல்லா சதிகளையும் செய்கிறார்" என்று ஹல்தருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை கூறி, அவருக்கு எதிராக கண்டன முழக்கங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர்.

ஹல்தர் வருவதற்கு முன்பே இவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in