பிரதமரிடம் நீதி கேட்டு நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பயணம்: குமரியில் நாளை தொடக்கம்

மன்னார்குடி நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்
மன்னார்குடி நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

கன்னியாகுமரியில் நாளை தொடங்கவுள்ள விவசாயிகளின்  நாடாளுமன்றம் நோக்கிய பயணத்தை  மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம், ஒடிசா, ஹிமாச்சல் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முன்னணி விவசாயிகள் சங்கங்களின் தலைவர்களும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பிரதிகளும்  குமரி முதல் டெல்லி நாடாளுமன்றம் நோக்கிய பயணம் மேற்கொள்ள உள்ளனர். 

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி நீதி கேட்டு நடைபெறும் இந்த நெடும் பயணத்தை நாளை 2-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து  தொடங்க உள்ளனர். இதில் பங்கேற்கும் பயணக்குழு உறுப்பினர்கள் இன்று அதிகாலை மன்னார்குடியில் ஒன்று கூடினர்.  அங்கு  நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு  பிறகு அவர்கள் அனைவரும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டு சென்றனர்

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள்
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள்

இந்த பயணம் குறித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின்போது  வேளாண் விரோத சட்டத்தை திரும்ப பெறுகிறோம். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வதற்கு சட்டம் கொண்டு வருவோம்  என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவாதங்களை கொடுத்தார்.  ஆனால் இதுவரையிலும் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. 

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சி காலத்தில் இறுதி கட்ட பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பிரதமரின் உத்தரவாதம் குறித்து எதுவும் இடம்பெறாதது விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும் அச்சத்தையும் அளித்தது. அதனால் நீதிகேட்டு  நாளை 2-ம் தேதி கன்னியாகுமரியில் பயணம் தொடங்க உள்ளது. 

மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தொடங்கி வைக்கிறார். நாளைய பயணத்தில் கேரள  முதலமைச்சரையும், நாளை மறுதினம்  சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சரையும்  சந்திப்பதற்கு அனுமதி கோரியுள்ளோம்.  தொடர்ந்து 4-ம் தேதி ஆந்திர மாநில முதலமைச்சரை சந்திக்க திட்டமிட்டுள்ளோம். 

ஏற்கெனவே திட்டமிட்டபடி அனைத்து மாநில முதலமைச்சர்களும் சந்தித்து ஆதரவு கோர உள்ளோம். நிறைவாக டெல்லியில் வரும் மார்ச் 20-ம் தேதி பயணம் நிறைவு பெறும். அங்கு குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்க அனுமதி கேட்க உள்ளோம். அனுமதி கொடுத்தால் குடியரசு தலைவரை சந்திப்போம். கொடுக்க மறுத்தால் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்தில் கோரிக்கை மனுவை கொடுத்து அவர்கள் மூலம் நாடாளுமன்றத்திலும், குடியரசு தலைவரிடத்திலும்  கொடுத்து எங்கள் கோரிக்கைகளை   வலியுறுத்த கேட்டுக் கொள்வோம்.

இப்பயணம் அரசியலுக்கு அப்பாற்பட்டு பிரதமரின் உறுதிமொழிகளை நிறைவேற்ற வலியுறுத்தும்  பயணமாகவும், இந்தியா முழுவதும் விவசாயிகளை ஒன்றுபடுத்துகிற பயணமாக அமையும்.  இப்பயணத்தில் போராட்டத்திற்கு இடமில்லை. இதுவொரு விழிப்புணர்வு பயணமாக நடத்தப்படும்"  என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in