`மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கவும்'- தமிழக அரசை வலியுறுத்தும் பி.ஆர்.பாண்டியன்

`மயிலாடுதுறையை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கவும்'- தமிழக அரசை வலியுறுத்தும் பி.ஆர்.பாண்டியன்

``வரலாறு காணாத மழையை சந்தித்து இருக்கும் மயிலாடுதுறை மாவட்டத்தை  பேரிடர் பாதித்த மாவட்டமாக  உடனடியாக அறிவிக்க வேண்டும்'' என்று விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம். மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,  "தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. சென்றாண்டு பெய்த மழைக்கு உரிய இழப்பீடு கொடுக்க தமிழக அரசு முன்வரவில்லை. முதலமைச்சர் பார்வையிட்ட கிராமங்களுக்கு கூட காப்பீடு இழப்பீடும், பேரிடர் மேலாண்மை திட்டத்தில் உரிய இழப்பீடும் இதுவரையிலும் வழங்கப்படாமல் விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். 

தற்போது வரலாறு காணாத மழையால் 6 மணி நேரத்தில் 44 சென்டிமீட்டர் மழைப்பொழிவை மயிலாடுதுறை சந்தித்திருக்கிறது. எனவே மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் ஏக்கர் விளை நிலங்கள்  நீரில் மூழ்கி அழுகத் தொடங்கி உள்ளது.  அனைத்து கிராமங்கள், குடியிருப்புகள் நீரால் சூழப்பட்டு மக்கள் பரிதவித்து வருகிறார்கள். மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 

மரங்கள் சாய்ந்து சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக தமிழக அரசு அறிவித்து போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை தொடங்கிட வேண்டும்.  அமைச்சர்கள்,  உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை விரைந்து அனுப்பி வைக்க வேண்டும். 

தொடர்ந்து மழையால் பாதிக்கப்படுகிற விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை இதுவரையிலும் அறிவிக்கப்படவில்லை. கால்நடை, மனித இறப்புகளுக்கான பேரிடர் கால இழப்பீட்டுத் தொகை குறித்து எந்த அறிவிப்பையும் முதலமைச்சர் அறிவிக்காமல் மௌனம் காப்பது விவசாயிகளுக்கு சந்தேகமளிக்கிறது. தமிழக அரசின் மீது தமிழக விவசாயிகள் நம்பிக்கையளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை உணர்ந்து உரிய நிவாரண நடவடிக்கைகளை வெளிப்படைத் தன்மையோடு மேற்கொள்ள வேண்டும்.

காவிரி டெல்டாவில் ஒட்டுமொத்தமாக ஐந்து லட்சம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி அழுகத் தொடங்கியிருக்கிறது. விரைந்து நிவாரண திட்டங்களை அறிவிக்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

கோயில் நிலங்களுக்கு காப்பீடு செய்வதற்கும்  வேளாண் கடன் பெறுவதற்கும் கிராம நிர்வாக அலுவலர்களை சான்றளிக்கக்கூடாது என அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக காவிரி டெல்டாவில் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரமடைந்திருப்பதால் தமிழக அரசு காவிரி டெல்டாவை புறக்கணிக்கிறதோ? என்று அஞ்சுகிறார்கள். இதனை உடன் கைவிட வேண்டும். மறுத்தால் தீவிரமான போராட்டத்தில்  விவசாயிகளை ஒன்றுப்படுத்தி களமிறங்குவோம்"  என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in