மோடி அரசுக்கு எதிராக குமரி முதல் டெல்லி வரை நீதிகேட்டு நெடும் பயணம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

நாகையில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்  நடைபெற்றது.
நாகையில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

மத்திய பாஜக அரசைக் கண்டித்து நீதிகேட்டு நெடும் பயணம் நடத்தி டெல்லியில் பாராளுமன்றம்  முன்பாக உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர்  பிஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நாகப்பட்டினத்தில் இன்று  நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிஆர்.பாண்டியன் பின்பு, செய்தியாளர்களிடம்  கூறுகையில், "2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளுடைய வருவாயை  இரட்டிப்பாக்குவோம் என்று பிரதமர் மோடி கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தார். இன்று வரையிலும் அது நிறைவேற்றப்படவில்லை. 

டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தை அடுத்து புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற்று விட்டதாகவும், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் உத்தரவாதம் அளித்தார். அதனை ஏற்று போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால், இதுவரையிலும் பிரதமர் இதுகுறித்து வாய் திறக்க மறுக்கிறார். 

புதிய வேளாண் சட்டத்தைத் திரும்ப பெற்றதாக அறிவித்தாரே தவிர அதுகுறித்து தெளிவான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் 2024 பாராளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. பிப்ரவரி 1-ல் மத்திய அரசு பிரதமர் மோடி தலைமையில் 2-வது ஆட்சிகால இறுதிக்கட்ட பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளது.  விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்ற தவறியதால் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளும் பாஜக ஆட்சிக்கு எதிராக கோபத்தில் உள்ளனர்.  

விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுக்கும் மோடி அரசுக்கு எதிராக மார்ச்  1-ல் குமரி முதல் டெல்லி பாராளுமன்றம் நோக்கி மாபெரும் நீதி கேட்கும் நெடும் பயணத்தைத் துவக்க உள்ளோம். 

பாஜக தவிர்த்து  மற்ற கட்சிகள் ஆளும் கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம், பிஹார், சத்தீஸ்கர்,  ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட12 மாநில முதலமைச்சர்களை சந்தித்து  ஆதரவு கோர உள்ளோம்.  அத்துடன் விவசாயிகளுக்கு லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி மாநில சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்த உள்ளோம். 

இதன் நிறைவாக மார்ச் 21-ம் தேதி டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும்  உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி  நீதி கேட்கும் நெடும் பயணத்தை நிறைவு செய்ய உள்ளோம். இப்பயணத்தில் தேசிய அளவிலான பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் பங்குகொள்ள அழைப்பு விடுத்துள்ளோம்" என்று தெரிவித்தார். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in