இனி வட்டாட்சியர் அலுவலகங்களில் குறைதீர் கூட்டம்: விவசாயிகளின் அலைச்சலை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

விவசாயிகள்
விவசாயிகள்இனி வட்டாட்சியர் அலுவலகங்களில் குறைதீர் கூட்டம்: விவசாயிகளின் அலைச்சலை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

கடலூர் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதனால் அன்றைய தினம்  மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் மாவட்ட  தலைநகரம் நோக்கி இதற்காக சென்று வர வேண்டியுள்ளது. 

இந்த நிலையை மாற்றிடும் வகையில்  கடலூர்  மாவட்ட ஆட்சியர், அந்தந்த  வட்டாட்சியர் அலுவலகங்களிலேயே விவசாயிகள் குறைதீர்  கூட்டங்களை நடத்த  உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று  திங்கட்கிழமை மாவட்டத்தில் உள்ள  அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் விவசாய குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது.

அந்தந்த பகுதி வேளாண்மை உதவி இயக்குநர்கள் இக்கூட்டத்தினை வட்டாட்சியர்களுடன் இணைந்து கூட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு நடத்திட வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  விவசாயிகள் அளிக்கும் மனுவின் மீது வட்டாட்சியருடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுத்திடவும், விவசாயிகளுக்கு தக்க பதில் சென்றடைவதையும் உறுதிப்படுத்திடவும்  அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெறப்பட்ட மனுக்கள் குறித்த விவரங்கள் மற்றும் கூட்ட நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியருக்கு இருதினங்களுக்குள் அனுப்பிட வேண்டும் என்று  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே வட்ட அளவில் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தில் விவசாயிகள் அனைவரும் பங்குபெற்று தங்கள் குறைகளை முறையிட்டு தீர்த்துக் கொள்ளலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in