திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அதிகாலையில் வந்த விவசாயிகள்: திடீர் உண்ணாவிரதத்தால் பரபரப்பு!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அதிகாலையில் வந்த விவசாயிகள்: திடீர் உண்ணாவிரதத்தால் பரபரப்பு!

தங்களின் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மா.சின்னதுரை தலைமையில் இன்று காலை  ஆறு மணி அளவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த விவசாயிகள்,  அலுவலகத்திற்கு முன்பாக திடீரென தரையில் அமர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப்   போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 

விவசாய கூலி பணிகளுக்கு வேலை ஆட்கள் கிடைக்காத காரணத்தால், தேசிய ஊரக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திட வேண்டும், அரியாறு - கோரையாறு - உய்யக்கொண்டான் - குடமுருட்டி ஆறு - கொடிங்கால் ஆகியவற்றில் நிதி ஒதுக்கீடு செய்து நிரந்தர பணிகளை தொடங்க வேண்டும், ஆறு, ஏரி. குளங்கள். கண்மாய்கள் குட்டை ஆகியவற்றில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு உடனடியாக மீட்க வேண்டும். 

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் கடலுக்கு சென்று வீணாக கலப்பதை தடுக்கும் வகையில் கதவணைகள் மற்றும் தடுப்பணைகள் மூலம் நீரை சேமிக்க வேண்டும், காலநிலை மாற்றத்தாலும் இயற்கை பேரிடராலும் பாதிப்புக்கு உள்ளாகிய விவசாய பயிர்களுக்கு உரிய இழப்பீடு, பயிர் காப்பீட்டு நிவாரணம் வழங்க வேண்டும், திருச்சி மாநகர் உட்பட்ட கே.சாத்தனூர் பஞ்சப்பூர் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான 100 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலங்களின் உள்ள ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும்,  

திருச்சி மாவட்டம் அதவத்தூர் மேற்கு பகுதியில் உள்ள புதுக்குளம் நீர்நிலை புறம்போக்கை ஆக்கிரமித்தவர்களின் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்க வேண்டும். திருச்சி மாவட்டத்திற்குள் புதிதாக டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்க கூடாது என்பன  உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் இந்த  தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in