“பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை!”

ட்விட்டரில் கருத்து தெரிவித்த ராகேஷ் திகைத்
ராகேஷ் திகைத்
ராகேஷ் திகைத்

“பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என விவசாயிகள் விரும்பவில்லை. வெளிநாடுகளின் பார்வையில் அவரது பிம்பத்தைச் சிதைக்கவும் நாங்கள் விரும்பவில்லை” என விவசாயிகள் போராட்டத்துக்குத் தலைமை வகித்த பாரதிய கிஸான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகைத் கூறியிருக்கிறார்.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் எனக் கோரி, ஏறத்தாழ ஓராண்டாக விவசாயிகள் போராடிவந்த நிலையில், அந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்படுவதாக நவம்பர் 19-ல் பிரதமர் மோடி அறிவித்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்நிலையில், நேற்று ட்விட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் ராகேஷ் திகைத், “வேளாண் சட்டங்கள் தொடர்பாகப் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என விவசாயிகள் விரும்பவில்லை. வெளிநாடுகளின் பார்வையில் அவரது பிம்பத்தைச் சிதைக்கவும் நாங்கள் விரும்பவில்லை. எந்த முடிவாக இருந்தாலும், அது விவசாயிகளின் ஒப்புதலுடன் எடுக்கப்பட வேண்டும். நாங்கள் நேர்மையாக வயலில் இறங்கி உழைக்கிறோம். ஆனால், மத்திய அரசு எங்கள் கோரிக்கைக்குச் செவிசாய்க்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.

சமீபத்தில் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “நாங்கள் வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்தோம். சிலர் அதை விரும்பவில்லை. ஆனால், அரசு ஏமாற்றம் அடைந்துவிடவில்லை. நாங்கள் சில அடிகள் பின்னோக்கிச் சென்றிருக்கிறோம். மீண்டும் முன்னே செல்வோம். ஏனெனில், விவசாயிகள்தான் இந்தியாவின் முதுகெலும்பு. முதுகெலும்பு வலிமையடைந்தால், நாடும் வலிமையடையும்” என்று கூறியிருந்தார்.

அமைச்சரின் பேச்சு சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டுவரும் திட்டம் அரசுக்கு இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.

ஒருவேளை மீண்டும் வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டால், விவசாயிகள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவார்கள் என ராகேஷ் திகைத் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in