தமிழகத்திற்கு தனி நெல்கொள்முதல் கொள்கை வேண்டும்: மத்திய அமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை

தமிழகத்திற்கு தனி நெல்கொள்முதல் கொள்கை  வேண்டும்: மத்திய அமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை

மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமரை டெல்லி கிரிஷி பவனில் இன்று நேரில்  சந்தித்த  தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்  பிஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள்  தமிழகத்திற்கென தனி நெல் கொள்முதல் கொள்கை  உருவாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

டெல்லியில் கிரிஷி பவனில்  தமிழகத்தில் நெல் கொள்முதல் மற்றும் விவசாயிகள் நலன் கருதி பல்வேறு கோரிக்கைகள் உள்ளடக்கிய கோரிக்கை மனுவை வழங்கியபின் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வேளாண் உற்பத்திக்கும், இழப்பிற்கும் மத்திய-மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்.  காப்பீடு திட்டத்தில் இழப்பீடு பெறுவதற்கான நடைமுறைகளை இலகுவாக்க வேண்டும். ரபி, காரிப் பருவ கொள்முதல் தமிழக பருவ காலத்திற்கு முரணாக உள்ளது. எனவே, தமிழ்நாட்டுக்கு தனி சிறப்பு கொள்முதல் கொள்கையை மத்திய அரசு உருவாக்கிட வேண்டும். 

நடப்பாண்டு ஈரப்பதத்தைக் காரணம் காட்டி மத்திய அரசிடம் அனுமதி வழங்க காலதாமதம் கூறி கொள்முதலை முடக்கிவிட்டனர். இதனால் விவசாயிகள வீதிகளில் நெல்லை கொட்டி வைத்து மாதக்கணக்கில் பரிதவித்து வருகின்றனர். எனவே, உடனடியாக அவற்றைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தொடங்கிட வேண்டும்.

மத்திய அரசு உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்புகளை உருவாக்குகிறபோது வணிகர்கள், சிறு தொழில் முதலீட்டாளர்கள் ஏற்றுமதியாளர்களை உள்ளடக்கி உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்கிட வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தில் விவசாயப் பணிகள் பாதிக்காத வகையில் ஆண்டுக்கு 100 நாள் வேலை இல்லா காலங்களை ஊராட்சிகள் தோறும் கணக்கிட்டு  அதற்கானப் பணி நாட்ககளை பட்டியலிட வேண்டும். அதன் அடிப்படையில் வேலை கொடுப்பதற்கான பணிகளை திட்டமிட வேண்டும். விவசாய மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்க வேண்டும்"  என்று தங்கள்  மனுவில் கேட்டுக் கொண்டுள்ளதாக  பாண்டியன் தெரிவித்தார். 

முன்னதாக மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பசுபதிகுமார் பரஸ்சை  சந்தித்து,  தமிழகத்தில் மாவட்ட அளவில் வேளாண் செயலாக்க உற்பத்தியாளர் குழு அமைத்து மதிப்பு கூட்டும் தொழில் நுட்பங்களை உள்ளடக்கி சந்தைப் படுத்துவதற்கான பொதுவானதும் மற்றும் கூட்டு அடிப்படையிலான   அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்க பாகுபாடின்றி அனுமதி வழங்க வேண்டும். 

ஏற்கெனவே தமிழக அரசு பரிந்துரை செய்ததில் (மினி புட் பார்க்) திருவாரூர், தென்காசி, தர்மபுரி மாவட்டங்களுக்கு அனுமதி வழங்க மறுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. எனவே அதை  மறுபரிசீலினை செய்து உடன் அனுமதி வழங்க வேண்டும்.  மேலும் காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் அரவை ஆலைகள் அமைக்க அனுமதி வழங்கிட வலியுறுத்தினோம். அதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் டிசம்பர், ஜனவரி மாதாங்களில் அனுமதி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

மேலும் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்திடவும், நிதி ஒதுக்கீடு செய்திடவும் பிரதமர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது என்றும் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in