மேகேதாட்டு வரைவு திட்ட அறிக்கையை தீயிட்டு கொளுத்த டெல்டா விவசாயிகள் முடிவு!

துரைமுருகனிடம் மனு அளிக்கும் பி.ஆர்.பாண்டியன்
துரைமுருகனிடம் மனு அளிக்கும் பி.ஆர்.பாண்டியன்

மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசையும், காவிரி மேலாண்மை ஆணையத்தையும் கண்டித்து காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ள ஜூன் 23-ம் தேதி காவிரி டெல்டாவில் விவசாயிகள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றியும், மேகேதாட்டு வரைவுத் திட்ட அறிக்கையை தீயிட்டுக் கொளுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

கர்நாடக அரசு அளித்துள்ள மேகேதாட்டு அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை எதிர்வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் நேற்று உறுதிபட தெரிவித்திருந்திருந்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் சென்னையில் தமிழக அரசின் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து இதுகுறித்து கோரிக்கை மனு அளித்தார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், காவிரி பிரச்சினையில் தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக துரோகம் இழைக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த பிறகு 2018-ல் ஆணையத்தின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு மேகேதாட்டு அணை கட்ட வரைவுத் திட்ட அறிக்கை தயார் செய்ய கர்நாடகாவிற்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கியது.

இதனை எதிர்த்து 2018-ல் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் கபினி கிருஷ்ணராஜசாகர் அணைக்கு கீழே ஓடி வரும் உபரிநீரை கர்நாடகம் சொந்தம் கொண்டாட முடியாது என்றும், வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி கொடுத்தாலும் அணை கட்ட முடியாது என்றும் தீர்ப்பில் சுட்டிக் காட்டியிருக்கிறது. நடுவர் மன்றமும் இதனை உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில், மேகேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடஅரசு, சட்டவிரோதமாக முயற்சி எடுப்பதும், அதற்கு இந்திய அரசு துணை போவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தற்போது கர்நாடக அரசு சட்ட விரோதமாக தயாரித்து கொடுத்திருக்கிற வரைவுத் திட்ட அறிக்கையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வேன், அதற்கு எனக்கு அதிகாரம் இருக்கிறது என்று ஆணையத் தலைவர் சவால் விடுவது மத்திய அரசின் அரசியல் அழுத்தத்தின் காரணத்தால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயலாக உள்ளது.

எனவே, காவிரி தமிழக உரிமையைப் பறிப்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம் மூலமாக சதி செயலில் ஈடுபடுகிறது இதனை எதிர்த்து கடந்த 7-ம் தேதி தமிழக அரசு மீண்டும் ஒரு வழக்கை உச்ச நீதிமன்றம் தாக்கல் செய்திருக்கிறது. தற்போது உச்ச நீதிமன்றம் கோடை விடுமுறையில் இருப்பதால் அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி கொண்டு அவசர, அவசரமாக ஆணையத் தலைவர் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் போகிறோம் என்று சவால் விடுவது ஒருதலைபட்சமானது.

தமிழகத்தை அழிப்பதற்கு மத்திய அரசின் சதிக்கு துணை போவதாக அமையும். இதனைக் கண்டித்து வருகிற 23-ம் தேதி ஆணையக் கூட்டம் நடைபெறும் அதேநாளில் காவிரி டெல்டா விவசாயிகள் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி கர்நாடகத்தின் வரைவு திட்ட அறிக்கை நகலை தீயிட்டுக் கொளுத்துவோம்.

தமிழ்நாட்டில் தற்போது திமுக ஆளுங்கட்சியாக இருப்பதால் கூட்டணி கட்சிகளும் இதற்கான போராட்டத்தில் பங்கேற்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. அதேபோல் அதிமுக, பாஜக கூட்டணி இருப்பதால் தமிழகத்தில் காவிரி உரிமையை மீட்டெடுப்பதற்கான போராட்டக்களத்தில் பின்னடைவு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனை மத்திய அரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஆணையம் மூலமாக மேகேதாட்டு அணையைக் கட்டி தமிழகத்தை அழிப்பதற்கு சதி செயலில் ஈடுபட்டுள்ளது. எனவே, போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும். சட்டப்போராட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் ஏற்கனவே மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை மீண்டும் கட்டமைத்து தீவிரப்படுத்தினால் தான் காவிரி உரிமையை மீட்டெடுக்க முடியும். இதை அமைச்சரிடம் எடுத்துச் சொன்னேன்" என்று பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in