’குறைந்தபட்ச ஆதரவு விலைக் குழு ஒரு கேலிக்கூத்து’ - மத்திய அரசுடன் மீண்டும் மோதும் விவசாயிகள்

விவசாய அமைப்புகளின் கோபத்தின் பின்னணி என்ன?
’குறைந்தபட்ச ஆதரவு விலைக் குழு ஒரு கேலிக்கூத்து’ - மத்திய அரசுடன் மீண்டும் மோதும் விவசாயிகள்

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை மாபெரும் போராட்டம் நடத்தி திரும்பப் பெறவைத்த விவசாய அமைப்புகள், தற்போது மேலும் ஒரு விவகாரத்தில் மத்திய அரசுடன் மோதத் தொடங்கியிருக்கின்றன.

குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம், வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி காலை 10.30 மணிக்கு டெல்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகம் (என்.ஏ.எஸ்.சி) கட்டிடத்தில் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று ஆரம்பம் முதலே பிடிவாதம் காட்டிவருகிறது, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிஸான் மோர்ச்சா (எஸ்கேஎம்). மறுபுறம், முதல் கூட்டத்தில் அந்தக் கூட்டமைப்பு கலந்துகொள்ளும் என்றும் அரசு நம்புகிறது. ஆனால், இந்தக் குழுவே ஒரு கேலிக்கூத்து என்றும், விவசாயிகளுக்கு எதிரானது என்றும் விவசாய அமைப்புகளின் தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்துவருகின்றனர்.

பின்னணி என்ன?

வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்ததன் மூலம் கையைச் சுட்டுக்கொள்ளும் அளவுக்கு விளைவுகளை எதிர்கொண்ட மத்திய அரசு, ஒருவழியாக அவற்றைத் திரும்பப் பெற்றது. பின்னர் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக, நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவருமா அல்லது இவ்விஷயத்தில் முடிவெடுக்கும் பொறுப்பை மாநில அரசுகள் வசம் தள்ளிவிடுமா எனும் கேள்விகள் எழுந்தன.

எனினும், குறைந்தபட்ச ஆதரவு விலைக் குழுவை ஜூலை 18-ல் மத்திய அரசு அமைத்தது. வேளாண் துறைச் செயலாளர் சஞ்சய் அகர்வால் தலைமையிலான இந்தக் குழுவில், நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த், வேளாண் பொருளாதாரத் துறை நிபுணர்கள், வேளாண் பல்கலைக்கழகங்களின் உறுப்பினர்கள். மத்திய அரசு செயலாளர்கள் 5 பேர், கர்நாடகம், ஆந்திரம், சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கின்றனர்.

முதல் கூட்டத்தின்போது, குழுவின் உறுப்பினர்கள் அறிமுகம் செய்துவைக்கப்படுவார்கள்; எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றெல்லாம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இக்குழுவில் சம்யுக்த கிஸான் மோர்ச்சா அமைப்புக்காக மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. எனினும், இதுவரை அந்தக் குழுவில் அங்கம் வகிக்க சம்யுக்த கிஸான் மோர்ச்சா ஒப்புக்கொள்ளவில்லை.

என்ன காரணம்?

குறைந்தபட்ச ஆதரவு விலைக் குழுவில் அங்கம் வகிக்கும் 5 விவசாயிகள் உட்பட அனைவரும் அரசின் விசுவாசிகள் என்றும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகளுக்கும் அவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது. மேலும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்ற கையோடு மத்திய அரசு அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என விவசாய அமைப்புகள் கருதுகின்றன. வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போடப்பட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்தப் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவை வலியுறுத்திவருகின்றன.

அத்துடன் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட ஆசிஷ் மிஸ்ராவின் தந்தையும், மத்திய அமைச்சருமான அஜய் மிஸ்ரா பதவிநீக்கம் செய்யப்பட்டு, கைதுசெய்யப்பட வேண்டும் என்றும் விவசாய அமைப்புகள் கோரி வருகின்றன. லக்கிம்பூர் கெரியில் பாரதிய கிஸான் யூனியன் (பிகேயூ) அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தலைமையில், ஆகஸ்ட் 18 முதல் 75 மணி நேரத்துக்குத் தொடர் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தணியாத கோபத்தில் இருக்கும் விவசாயிகளை மத்திய அரசு எப்படி சமாளிக்கப்போகிறது என்பது முக்கியமான கேள்வி!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in