
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா பொட்டல் கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே ஒரு யானை வாய்க்கால் கரையை தாண்டி தனியார் தோட்டங்களில் உலா வந்து கொண்டிருந்தது. அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் வனத்துறையினரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் யானையை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதன் விளைவாக இன்று அந்த யானை மரணத்தை தழுவி இருக்கிறது.
யானை உணவு போராட்டத்தில் ஈடுபட்ட போது, பனை மரம், மின்கம்பம் அடுத்தடுத்து சாய்ந்ததில், அந்த யானை அதே மின் வயரில் விழுந்து பலியாகி இருப்பதாக தெரிகிறது.
வனத்துறையினர் அலட்சியமே யானையின் சாவுக்கு முதன்மை காரணமாக இருக்கிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் வனத்துறையினர் மீது அதிருப்தியில் உள்ளனர்.
"ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பும் இதே போன்று வனத்துறையின் அலட்சியத்தால் ஒரு யானை பலியானது. வன உயிர்களின் பாதுகாப்பு விஷயத்தில் வனத்துறையினர் அலட்சிய போக்கை கைவிட வேண்டும். வன விலங்குகளை பாதுகாக்க துடிக்கும் மக்கள், விவசாயிகளோடு அம்பை சரக வனத்துறையும் கைகோர்த்து வனத்தையும், வன விலங்குகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும்.
யானை மரணித்த மண்ணில் இருந்து வந்தவன் என்ற தார்மீக உரிமையோடு, அலட்சியமாக இருந்த வனத்துறையினருக்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். வன உயிர்களின் பாதுகாப்பு, வனங்களின் பாதுகாப்பு, பல்லுயிர்ச் சூழலை பாதுகாப்பது தொடர்பாக வனத்துறை சார்ந்த அலுவலர்கள், ஊழியர்களுக்கு முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதை நிறைவாக செய்ய வேண்டியது அரசு மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்களின் தலையாய கடமை.
ஒரு யானையின் மரணம் என்பது ஒரு காட்டின் மரணம். பொட்டல் காடுகள் முழுக்க தேக்கு மரங்களையும், யூகலிப்டஸ் மரங்களையும் வளர்த்து விட்டு, யானைகளின் வழித்தடத்தை மறைத்து வன அழிவுக்கு வித்திடுபவர்களுக்கு துணை போவதையும் வனத்துறை கைவிட வேண்டும். வனவிலங்குகள் மற்றும் வனத்தின் பாதுகாப்பு தொடர்பாக மலை அடிவாரத்தைச் சேர்ந்த மக்கள், விவசாயிகளோடு இணைந்து வன பாதுகாப்பு குழுக்களை வனத்துறை உருவாக்க வேண்டும். வனத்துறை உயர் அதிகாரிகளே கொஞ்சம் எங்கள் ஊர் வனப்பகுதியை நேரில் ஆய்வு செய்யுங்கள். அது வன விலங்குகளின் வாழ்விடமாகவே இருக்கிறதா, இல்லை வாழ்விடம் அளிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து வன விலங்குகளின் பாதுகாப்பையும், வனத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்யுங்கள்.
அந்த வனத்தில் வளம் இல்லையேல், எங்கள் மக்களின் வாழ்வில் வளம் இல்லை. இங்கு இருக்கும் விவசாய நிலங்களுக்கு தேவையான நீர் தேவையை அந்த வனமே பூர்த்தி செய்து கொண்டு இருக்கிறது. வனம் வாழ்ந்தால்தான் எங்களின் வாழ்வு சிறக்கும் என்ற தன்நலத்தோடும், வனம் வாழ வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும்" என்றனர் பொதுமக்கள், விவசாயிகள்.