
பொங்கல் கரும்பு விவகாரம் தொடர்பாக திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளும், பாஜக மற்றும் த.மா.கா ஆகிய கட்சிகளின் சார்பிலும் அடுத்தடுத்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பு வழங்க வேண்டும். கரும்புக்கு நியாயமான விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் செங்கரும்புகளுடன் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரை நிர்வாணத்துடன் சாலையில் அமர்ந்து வெகு நேரம் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, தேங்காய், வெல்லம் ஆகியவற்றை சேர்க்க வலியுறுத்தி பா.ஜ.க சார்பில் விவசாய அணி மாநகர் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் அடுத்ததாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க.வினர் கைகளில் கரும்பு மற்றும் தேங்காய்களை ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாவட்ட விவசாய பிரிவு தலைவர் புங்கனூர் எஸ்.செல்வம் தலைமையில், பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதே நேரம் எப்பொழுதுமே நூதன போராட்டத்தை கையில் எடுக்கும் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளை கண்ட போலீஸார் மிகுந்த எச்சரிக்கையுடன் அவர்களை அணுகினர். ஒரு பக்கம் விவசாயிகள், மறுபக்கம் அரசியல் கட்சிகள் என பல்வேறு தரப்பினரும் கரும்புகளுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.