
பயிர் வைப்பது தொடர்பான இடப்பிரச்சினையில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் தென்காசியில் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தென்காசி மாவட்டம், சிந்தாமணி பகுதியில் உள்ள அம்பேத்கார் ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் மைதுகனி(46). விவசாயியான இவர் ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்துவந்தார். நேற்று மாலை வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற மைதுகனி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் சென்று பார்த்தபோது மைதுகனி கொலை செய்யப்பட்டு இருந்தார். புளியங்குடி போலீஸார் மைதுகனி உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனிடையே மைதுகனி குத்தகைக்கு எடுத்து பயிர் செய்த நிலத்தின் அருகில் சகோதரர்கள் இருவரின் நிலம் உள்ளது. மைதுகனி தன் வயலில் நாய் ஒன்று வளர்த்துவந்தார். அந்த நாயானது அந்த சகோதரர்கள் தங்கள் தோட்டத்தில் வளர்த்துவந்த கோழியை பிடித்துக் கொன்றுள்ளது. இதனால் மைதுகனிக்கும், அந்த சகோதரர்களுக்கும் இடையே அந்த வயலில் பயிர்வைத்து பராமரிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்துவந்தது. இதனால் அவர்கள் கொலை செய்திருக்கலாமோ என்னும் கோணத்தில் புளியங்குடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.