கத்தை, கத்தையாக 80 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ளநோட்டுகள்: புழக்கத்தில் விட்ட விவசாயி கைது

கத்தை, கத்தையாக 80 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ளநோட்டுகள்: புழக்கத்தில் விட்ட விவசாயி கைது

மும்பையில் 500 ரூபாய் கள்ளநோட்டுக்களைப் புழக்கத்தில் விட்ட விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 80 லட்சம் மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுக்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மும்பையின் புறநகர் பகுதியான போவாய் பகுதியில் கள்ளரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படுவதாக குற்றப்பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து போவாய் பகுதியில் போலீஸார் கள்ளநோட்டு பேர்வழியைப் பிடிக்க வலை விரித்தனர். இதில் 31 வயது விவசாயி ஒருவர் சிக்கினார். அவரிடமிருந்து 500 ரூபாய் மதிப்புள்ள 16 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை குற்றப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். அவருடன் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, குறுகிய காலத்தில் பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில் அந்த விவசாயி கள்ளநோட்டுக்களை சந்தையில் புழக்கத்தில் விட்டது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள 16 ஆயிரம் கள்ளநோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அந்த விவசாயியை போலீஸார் கைது செய்தனர். அவரை ஜன.4-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவசாயி ஒருவர் கள்ளரூபாய் நோட்டுக்களைப் புழக்கத்தில் விட்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in