பழிக்குப் பழி வாங்க பதுங்கிய பிரபல ரவுடி; துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்த போலீஸ்: சினிமா பாணியில் நள்ளிரவில் சம்பவம்

பழிக்குப் பழி வாங்க பதுங்கிய பிரபல ரவுடி; துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்த போலீஸ்: சினிமா பாணியில் நள்ளிரவில் சம்பவம்

தாம்பரம் அருகே பழிக்குப் பழி வாங்க பதுங்கியிருந்த பிரபல ரவுடியை நள்ளிரவில் துப்பாக்கி முனையில் போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் ரவுடி நெடுங்குன்றம் சூர்யா தலைமையில் ஒரு கோஷ்டி செயல்படுகிறது. இவர்களுக்கு எதிராக ரவுடி சீசிங் ராஜா தலைமையில் மற்றொரு கோஷ்டி செயல்படுகிறது. இந்த இரண்டு கோஷ்டிகளும் கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா கடத்தல், ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டுவருகிறது. இதனால் அடிக்கடி இரு கோஷ்டிகளுக்கும் மோதல் ஏற்படுகிறது. இவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ரவுடி சீசிங் ராஜாவின் கூட்டாளியான ராகுலின் தம்பி பப்லுவை நெடுங்குன்றம் சூர்யாவின் கூட்டாளிகள் கொலை செய்தனர். இந்த வழக்கின் குற்றவாளிகளைத் பழி தீர்ப்பதற்காக சீசிங் ராஜாவின் கூட்டாளியான பிரபல ரவுடி விவேக் ராஜ் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்த விவேக் ராஜ் தாம்பரம், சிட்லபாக்கம், சேலையூர், பீர்க்கன்கரணை, ஓட்டேரி ஆகிய காவல் நிலையத்தில் 11 வழக்குகளில் தேடப்படும் சரித்திர பதிவேடு குற்றவாளியாவார். இவர் மீது கொலை முயற்சி, ஆள் கடத்தல், வழிப்பறி, கஞ்சா கடத்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் முடிச்சூர் பைபாஸ் சாலை அருகே விவேக் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தாம்பரம் காவல் ஆய்வாளர் சார்லஸ் தலைமையிலான தனிப்படை போலீஸார் அந்த இடத்திற்கு நேற்று நள்ளிரவு விரைந்து சென்று ரவுடி விவேக் ராஜை மடக்கி பிடித்தனர். அப்போது போலீஸாரிடம் இருந்து தப்பிக்க விவேக் முயற்சித்தபோது அவரைத் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

அந்த நேர்த்தில் விவேக் பள்ளத்தில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு கை, கால் முறிவு ஏற்பட்டது. அவருடன் இருந்த மற்றொரு கூட்டாளி பள்ளிக்கரணையைச் சேர்ந்த விஷால் என்பவரும் கைது செய்யப்பட்டார். அதன்பின் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சினிமா பாணியில் நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in