‘கோமாவில்தான் இருக்கிறார்... மீண்டு வருவார்’ - இறந்தவரின் உடலை 18 மாதங்களாக வீட்டில் வைத்திருந்த குடும்பம்!

‘கோமாவில்தான் இருக்கிறார்... மீண்டு வருவார்’ -  இறந்தவரின் உடலை 18 மாதங்களாக வீட்டில் வைத்திருந்த குடும்பம்!

உத்தர பிரதேசத்தில், கடந்த ஆண்டு மரணமடைந்த ஒருவரின் உடலை அவரது குடும்பத்தினர் பல மாதங்களாக வீட்டிலேயே வைத்திருந்தது தெரியவந்திருக்கிறது. அவர் கோமாவில் இருப்பதாகவே அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் நம்பியிருந்த தகவலும் வெளியாகியிருக்கிறது.

உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரின் ராவத்பூர் பகுதியைச் சேர்ந்த விமலேஷ் தீக்‌ஷித் வருமான வரித் துறையில் பணியாற்றிவந்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் அவர் மரணமடைந்தார். அவர் சிகிச்சை பெற்றுவந்த தனியார் மருத்துவமனை அவரது மரணச் சான்றிதழையும் வழங்கியிருந்தது. எனினும், அவரது மனைவி உட்பட அவரது குடும்பத்தினர் ஏனோ அவர் மரணமடைந்ததாகக் கருதவில்லை. அவரது உடலை வீட்டிலேயே வைத்திருந்தனர். அவர் கோமா நிலையில் இருப்பதாகவும் விரைவில் மீண்டுவிடுவார் என்றும் அவர்கள் கருதிவந்தனர்.

விமலேஷின் உடல் நாளுக்கு நாள் அழுகிவந்ததையும் பொருட்படுத்தாமல் அவர் உயிருடன் இருப்பதாகவே கருதிய அவரது மனைவி அவரது உடலுக்கு தினமும் காலை கங்கையின் புனித நீரைத் தெளித்துவந்திருக்கிறார். அவரது குடும்பத்தினர் அடிக்கடி ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்துச் செல்வதை அக்கம்பக்கத்தினர் கவனித்திருக்கிறார்கள். அவர்களிடமும், விலமேஷ் கோமாவில் இருப்பதாகவே அவரது குடும்பத்தினர் கூறியிருக்கிறார்கள்.

இதற்கிடையே, விமலேஷின் உடல் பல மாதங்களாக வீட்டிலேயே வைக்கப்பட்டிருப்பது குறித்து வருமான வரித் துறையினர், கான்பூரின் தலைமை மருத்துவ அலுவலருக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து, மருத்துவத் துறையினரும் காவல் துறையினரும் சென்று விசாரித்தனர். அப்போது, விமலேஷின் மனைவி மனநிலை சரியில்லாத நிலையில் இருப்பது அவர்களுக்குத் தெரியவந்தது. கோமாவில் இருக்கும் தனது கணவர் மீண்டுவிடுவார் என்றே அவர்களிடமும் அவர் கூறியிருக்கிறார். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விமலேஷின் உடலை லாலா லஜ்பத் ராய் மருத்துவமனைக்கு மருத்துவக் குழுவினர் கொண்டுசென்றனர். அவர் பல மாதங்களுக்கு முன்பே மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, மூன்று நபர் கொண்ட விசாரணைக் குழுவை தலைமை மருத்துவ அலுவலர் நியமித்திருக்கிறார். இதுகுறித்த விசாரணை அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in