நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றி குடும்பமே எரிப்பு: ஹெராயின் கடத்தல் கும்பல் அட்டகாசம்

நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றி குடும்பமே எரிப்பு: ஹெராயின் கடத்தல் கும்பல் அட்டகாசம்

ராஜஸ்தான் மாநிலத்தில் கொடுக்கல், வாங்கல் தகராறில் ஒரு குடும்பத்தையே ஹெராயின் கடத்தல் கும்பல் தீவைத்து எரித்தது. இதில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஹனுமன்கர்க் பிலிபங்கா பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்வீர்தாஸ் (36). இவரது மனைவி மன்பிரீத் கவுர் (34). இவர்களது மகன் ஏக்ம்ஜித் சிங்(7). இவர்கள் நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களது வீட்டின் கதவின் அடியில் பெட்ரோலை ஊற்றி மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் வீடு முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் ஜஸ்வீர்தாஸ், மன்பிரீத் கவுர் மற்றும் அவரது மகன் அலறித் துடித்துள்ளனர்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து கதவை உடைத்து மூவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் ஏக்ம்ஜித் உயிரிழந்தார். மேலும் ஜஸ்வீர்தாஸ், அவரது மனைவி மன்பிரீத் கவுர் ஆகியோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஹனுமன்கர்க் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது ஹெராயின் கடத்தல் கும்பலால் ஜஸ்வீர்தாஸ் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து ஹெராயின் கடத்தல் கும்பலைச் சேர்ந்த பாஜ்சிங்(53), அவரது மகன் ஷராஜ்(27) ஆகியோரை பஞ்சாப்பில் உள்ள அபோஹரில் போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர். ஜஸ்வீர்தாஸ்க்கும், பாஜ்சிங்கிற்கும் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்துள்ளது. அதனால் அவரை குடும்பத்துடன் எரித்துக் கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in