கர்ப்பிணியை வேறொரு பெண்ணின் கணவருடன் சேர்த்து வைத்த இன்ஸ்பெக்டர்: தூத்துக்குடியில் நடந்த அதிர்ச்சி

கர்ப்பிணியை வேறொரு பெண்ணின் கணவருடன் சேர்த்து வைத்த இன்ஸ்பெக்டர்: தூத்துக்குடியில் நடந்த அதிர்ச்சி

உண்மையான காதலர்களே பெற்றோருக்கும், காவல்துறைக்கும் பயந்து திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் போலீஸார் கள்ளக்காதல் ஜோடியை சேர்த்து வைத்திருக்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிமுத்து. இவர் இதேபகுதியைச் சேர்ந்த ஞானதீபம் என்பவரைக் கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். ஞானதீபம் இப்போது நான்குமாத கர்ப்பமாக உள்ளார். கடந்தமாதம் ஞானதீபம் வீட்டைவிட்டு வெளியேறினார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அந்தோணிமுத்து முத்தையாபுரம் காவல்நிலையத்தில் புகார்கொடுத்தார். இந்நிலையில் முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் திடீரென அந்தோணிமுத்துவைத் தொடர்புகொண்டார்.

உங்கள் மனைவி ஞானதீபம், அதேபகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரோடு வாழ விரும்புவதாகவும் பாதுகாப்புக் கேட்டும் காவல் நிலையம் வந்திருக்கிறார் என தெரிவித்தார். இதைக்கேட்டு பதறிப்போய் அந்தோணிமுத்து, தன் குடும்பத்துடன் காவல்நிலையம் சென்றார். அப்போது ஆய்வாளர் ஜெயசீலன் உங்கள் மனைவியின் வயிற்றில் இருக்கும் கருவுக்கு, பிரதீப் தான் அப்பா என்கிறார். இருவரும் மேஜர் என்பதால் இருவரையும் சேர்த்து அனுப்பிவைத்துவிட்டேன் எனக் கூலாக சொல்லியிருக்கிறார்.

இதனால் அந்தோணிமுத்து அதிர்ச்சியடைந்தது ஒருபக்கம் என்றால் பிரதீப்பின் மனைவி ஜஸ்வர்யாவோ கர்ப்பிணி பெண் ஞான தீபத்தோடு தன் கணவரை போலீஸாரே அனுப்பி வைத்திருப்பதைக் கேள்விப்பட்டு கடும் அதிர்ச்சியடைந்தார். ஆணோ, பெண்ணோ மறுமணம் செய்ய வேண்டுமானால் சட்டப்படி முதல் திருமணத்தை விவாகரத்துப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இது எதுவுமே செய்யாமல் முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் கள்ளக்காதலை சேர்த்து வைத்ததோடு மட்டுமல்லாமல், இருவரின் வாழ்க்கைத் துணையையும் தவிக்க விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதனிடையே தன் கணவரை தன்னோடு சேர்ந்து வைக்கவேண்டும் என பிரதீப்பின் மனைவி ஐஸ்வர்யாவும், தன் மனைவியை தன்னிடம் இருந்து பிரித்த இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தோணிமுத்துவும் சேர்ந்து தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் புகார் கொடுத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in