நடிகர் வடிவேலு, ஈரோடு மகேஷுக்கு போலி கெளரவ டாக்டர் பட்டம்: அதிரடியில் இறங்கியது அண்ணா பல்கலைக்கழகம்

பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம்
பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம்நடிகர் வடிவேலு, ஈரோடு மகேஷுக்கு போலி கெளரவ டாக்டர் பட்டம்: அதிரடியில் இறங்கியது அண்ணா பல்கலைக்கழகம்

நடிகர் வடிவேலு உள்பட பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கியதற்கும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறிய துணைவேந்தர் வேல்ராஜ், இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

நடிகர் வடிவேலு
நடிகர் வடிவேலு

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக அரங்கில் இன்டர்நேஷனல் ஆன்ட்டி கரப்ஷன் அண்ட் ஹியூமன் ரைட்ஸ் கவுன்சில் என்ற அமைப்பின் பெயரில் கடந்த 26-ம் தேதி இசையமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு, நடன இயக்குநர் சண்டி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ஈரோடு மகேஷ் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தற்போது இந்த பட்டம் போலியானது என சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறுகையில், "கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்விற்கும், அண்ணா பல்கலைக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜனவரி மாதம் ஓய்வு பெற்ற நீதியரசர் வள்ளிநாயகம் கொடுத்த சிபாரிசு கடிதம் அடிப்படையில் ஹால் வாடகைக்கு கொடுத்தோம். ஆனால் அவரிடம் இது தொடர்பாக நாங்கள் விவாதித்திருக்க வேண்டும். வெறும் சிபாரிசு கடித்தை மட்டுமே நம்பி வாடகைக்கு கொடுத்துவிட்டோம்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ்

இந்த விவகாரத்தில் நீதியரசர் வள்ளிநாயகம் ஏமாந்துள்ளார். சிபாரிசு கடிதம் வித்யாசமாக இருக்கிறது. அதில் இந்திய அரசாங்க முத்திரையை பயன்படுத்தியுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்வு நடைபெறும் என்பதால் தான் வள்ளிநாயகமும் கலந்து கொண்டிருப்பார் என நினைக்கிறோம். திட்டமிட்டு ஞாயிறு மாலை 3 மணிக்கு யாரும் இல்லாத நேரத்தில் நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர்.

இது குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதோடு, குற்றம் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். பல்கலைக்கழகங்கள் மட்டுமே கௌரவ டாக்டர் பட்டத்தினை வழங்க முடியும். தனியார் அமைப்பு சார்பில் கொடுத்த இந்த கௌரவ டாக்டர் பட்டம் பிரபலங்கள் உட்பட 40 பேர் வாங்கி ஏமாந்துள்ளனர். நேற்று மதியம் இந்த விவகாரம் தொலைக்காட்சியில் வந்த பிறகு தான் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. ஆளுநர் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுவிட்டோம். அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தை இனி தனியாருக்கு வாடகைக்கு விடுவதை நிறுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த பிரச்சினையை சட்டப்படி அணுக உள்ளோம்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in