
சினிமா பிரபலங்களுக்கு போலி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் தேடப்பட்டு வந்த சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணைய இயக்குநர், துணை இயக்குநர் மாமியார் வீட்டில் இருந்தபோது கைது செய்யப்பட்டனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 5-ம் தேதி திரைப்பட இசை அமைப்பாளர் தேவா, திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நகைச்சுவை நடிகர் வடிவேலு உள்ளிட்ட 50 பேருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தில் வைத்து வழங்கப்பட்ட இந்த பட்டங்கள் அனைத்தும் போலியானவை என தெரியவந்ததை அடுத்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து இந்த நிகழ்ச்சியை நடத்திய சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணைய இயக்குநர் ஹரிஷ் மற்றும் துணை இயக்குநர் மகாராஜா ஆகியோர் தலைமறைவாகினர். இதனைத்தொடர்ந்து கோட்டூர்புரம் போலீஸார் தனிப்படை அமைத்து தலைமறைவான ஹரிஷை தேடிவந்தனர். இந்தநிலையில் ஹரிஷ், மகாராஜா ஆகியோர் திருப்பத்தூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது, மாமியார் வீட்டில் பதுங்கி இருந்த மகாராஜா, ஹரிஷ் ஆகியோரை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தஞ்சாவூரை சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரியான ஹரிஷ் திருமுல்லைவாயில் பகுதியில் வசிந்து வந்ததும், இதேபோல் 9-ம் வகுப்பு படித்த நெல்லையை சேர்ந்த மகாராஜா எம்ஜிஆர் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இருவரும் சினிமா பிரபலங்கள், முக்கிய பிரமுகர்களின் புகைபடங்கள் மற்றும் கையெழுத்துக்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து மோசடி வேலைக்கு பயன்படுத்தியதும், ஏற்கெனவே இவர் 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் 4 பட்டமளிப்பு விழாக்கள் நடத்தி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து போலி டாக்டர் பட்டத்திற்கான சான்றிதழ், 97 பதக்கங்கள் மற்றும் போலி ரப்பர் ஸ்டாம்ப், 2 லேப்டாப், 1 ஐபோன், கம்ப்யூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.