கருக்கலைப்பு மாத்திரையால் கர்ப்பிணி பாதிப்பு: ஜாமீனில் வந்த போலி மருத்துவர் கைது

சுரேஷ்
சுரேஷ்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கைது செய்யப்பட்டு,  ஜாமீனில் வெளிவந்த போலி மருத்துவர் மீண்டும் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள ஆவட்டி கூட்டு ரோட்டில் நாமக்கல் மாவட்டம் குரங்காத்துபல்லம் கிராமத்தைச் சேர்ந்த  சுரேஷ்  (45) என்பவர்  கடந்த எட்டு ஆண்டுகளாக மருந்தகம் நடத்தி வந்துள்ளார். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு  போலி மருத்துவர் வழக்கில் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில்  வெளிவந்து ஒரு வாரமான நிலையில், திடீரென  நேற்று மீண்டும் சுரேஷை போலீஸார் கைது செய்தனர்.

ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் மனைவி கஸ்தூரி ( 32) ஏற்கெனவே இரண்டு பிள்ளைகள் இருக்கும் நிலையில்  மூன்றாவதாக கர்ப்பம் அடைந்தார். இதனால் கருவைக் கலைக்க  கடந்த 15-12-2022 அன்று ஆவட்டி கூட்டு ரோட்டில் உள்ள சுரேஷின்  மருந்தகத்திற்குச் சென்றுள்ளார்.  அங்கு அவருக்கு கருக்கலைப்பு மாத்திரைகள் கொடுத்து சுரேஷ் அந்த பெண்ணை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். 

இந்நிலையில் கஸ்தூரிக்கு ரத்தப்போக்கு அதிகமானதால்  அன்று  இரவு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்குச்  சென்றார்.  அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது அவருக்கு ரத்தப்போக்கு நிற்காமல் சென்றது. அதனால் அவரை  மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவலின் அடிப்படையில் ராமநத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில்  சுரேஷ் கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக கொடுத்தது தெரிய வந்தது. அதை எடுத்து வழக்குப் பதிவு செய்த ராமநத்தம் போலீஸார் உடனடியாக அவரை கைது செய்தனர்.

சுரேஷ்  நடத்தி வரும் மருந்தகத்தில் கடந்த நவம்பர்17- ம் தேதியன்று  திட்டக்குடி தலைமை மருத்துவர் சோமானந்தம் மற்றும் ராமநத்தம் கோபிநாத்  ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டபோது அவர் தனியார் மருத்துவப்பயிற்சி (பிரைவேட் மெடிக்கல் பிராக்டிஸ்) படிப்பை முடித்துவிட்டு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. அதனால்  அவரை போலி மருத்துவர் வழக்கில் கைது செய்தனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த  நிலையில் தற்போது ராமநத்தம் போலீஸாரால் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in