
யோகா படித்துவிட்டு 30 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எண்ணூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் சுதர்சன் குமார்(55). இவர் கடந்த 30 ஆண்டுகளாக தனக்கு சொந்தமான இடத்தில் கிரிஜா என்ற பெயரில் கிளினிக் நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று இரவு தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இணை இயக்குநர் டாக்டர் விசுவநாதன் தலைமையிலான அதிகாரிகள் கிரிஜா கிளினிக்கில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுதர்சன் குமார் நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றிக் கொண்டு இருப்பதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதன் பின்னர் அதிகாரிகள் அவரது சான்றிதழ்களை சோதனை செய்தபோது அதில் மருத்துவ படிப்பு சம்பந்தமான சான்றிதழ் எதும் இல்லாத நிலையில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
அப்போது, சுதர்சன்குமார் யோகா பட்டப்படிப்பு முடித்த சான்றிதழை வைத்து கொண்டு எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான மருத்துவம் மற்றும் மருந்துகளையும் நோயாளிகளுக்கு கொடுத்து வந்தது தெரியவந்தது. மேலும் மருத்துவ சான்றிதழ், முறையான உரிமம் இல்லாததால் சுதர்சன்குமார் போலி டாக்டர் என்பதை கண்டுபிடித்த அதிகாரிகள் அவரிடம் இருந்து மருந்து, மாத்திரைகள், ஊசிகள், குளுக்கோஸ் மற்றும் போலி மருந்து சீட்டுகளை கைப்பற்றினர். பின்னர் அவரை எண்ணூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து எண்ணூர் போலீஸார் சுதர்சன்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
30 வருடமாக போலி மருத்துவர் ஒருவர் மருத்துவம் பார்த்து வந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.