மெரினாவில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பெண்ணை புகைப்படம் எடுத்து 2 லட்சம் பறிப்பு: போலி காவல் உதவி ஆணையர் கைது

சதீஷ்குமார்.
சதீஷ்குமார்.

சென்னை மெரினா கடற்கரையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பெண்ணை மிரட்டி இரண்டு ஆண்டுகளாக 2 லட்சம் ரூபாய் வரை பணம் பறித்த போலி காவல் உதவி ஆணையர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (35). திருமணமான இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நாகலட்சுமி மெரினா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், " கடந்த 2019 டிசம்பர் மாதம் தனது சக ஊழியரான கிஷோர் என்பவருடன் விவேகானந்தர் இல்லம் எதிரே உள்ள மணற்பரப்பில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் தன்னை காவல் உதவி ஆணையர் என அறிமுகப்படுத்திக்கொண்டார். அத்துடன் சக ஊழியர் கிஷோருடன் நான் நெருக்கமாக இருந்தவாறு புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை பெற்றோரிடம் காட்டிவிடுவேன் என மிரட்டினார்.

மேலும், எனது வீட்டு முகவரி மற்றும் செல்போன் எண்ணைப் பெற்றுக்கொண்ட அந்த நபர் அன்றைய தினத்திலிருந்து என்னைத் தொடர்ந்து மிரட்டி தி.நகர் பேருந்து பணிமனை அருகே வரச்சொல்லி பணம் பறித்து வருகிறார். சில சமயங்களில் நேரில் வரவழைத்தும் சில நேரங்களில் கூகுள் பே மூலமாகவும் இதுவரை சுமார் 2 லட்சம் ரூபாய் வரை அவர் பறித்துள்ளார். தொடர் மிரட்டல் விடுத்து மனஉளைச்சலுக்கு ஆளாக்கிவரும் அந்த நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மெரினா போலீஸார், நாகலட்சுமியை வைத்து அந்த நபருக்கு செல்போனில் தொடர்புகொண்டு தி.நகர் பேருந்து பணிமனைக்கு பணம் தருவதாகக் கூறி வரவழைத்து கையும் களவுமாக பிடித்தனர்.

பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் மணலி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (40) என்பதும், துறைமுக ஒப்பந்தப் பணியாளராக பணிபுரிவதும் தெரிய வந்தது. நாகலட்சுமியிடம் தன்னை காவல் உதவி ஆணையர் எனக்கூறி ஏமாற்றி லட்சக் கணக்கில் பணம் பறித்ததும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சதீஷ்குமாரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in