சிதைந்த மகளின் முகம்; கண்ணீர் வடித்த பெற்றோர்: அறுவை சிகிச்சைக்கு உதவிய முதல்வர் ஸ்டாலின்

சிதைந்த மகளின் முகம்; கண்ணீர் வடித்த பெற்றோர்: அறுவை சிகிச்சைக்கு உதவிய முதல்வர் ஸ்டாலின்

முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முதல்வர் மருத்துவச் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்தவர்கள் ஸ்டிபன்ராஜ்-சௌபாக்கியா தம்பதியினர். இவர்களின் மூத்த மகள் தானியா (9). ஆறு வருடங்களுக்கு முன்பே இந்த சிறுமியின் கன்னத்தில் கொப்பளம் போன்று சிறு வீக்கம் தென்பட்டுள்ளது. இதைச் சாதாரண ரத்தக்கட்டு என நினைத்த இவரது பெற்றோர்கள் சிறுமியை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சிகிச்சைக்குப் பிறகும் பாதிப்பு குறையாத காரணத்தால், கடந்த 6 வருடங்களாக பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை தொடர்ந்தது. ஆனாலும் அந்த சிறுமிக்கு நோய் குணமாவதாகத் தெரியவில்லை. இதையடுத்து தானியாவின் முகத்தின் வலது பக்கம் கொஞ்சம்கொஞ்சமாக சிதையத் தொடங்கியது. பார்க்கவே பரிதாபமாக இருந்தது. இதனால் அந்த மாணவி படிப்பிலும் கவனம் செலுத்த முடியாத சூழல் உருவானது.

தானியாவின் அரியவகை நோய்க்குப் பெற்றோர் பத்து லட்சத்திற்கு மேல் செலவு செய்தும் எந்த பலனும் இல்லை. மேலும் முக அறுவை சிகிச்சை செய்வதற்கும் போதிய பணம் அவர்களிடம் இல்லை. இந்த சூழலில் தன்னுடைய மனக்குமுறல்களை முதல்வருக்குக் கோரிக்கையாக விடுத்தார்கள். இந்த தகவல் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தெரிவிக்கப்பட்டதும் கடந்த புதன் அன்று திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் இளங்கோவன் தலைமையில் மருத்துவக் குழுவினர் அந்த சிறுமியின் வீட்டிற்கே சென்று விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸும் அந்த சிறுமியைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து அரசு சார்பில் பூந்தமல்லி அருகே உள்ள தண்டலம் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமிக்குச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்வரின் அறிவுறுத்தலின் படி நேற்றும் இன்றும் அமைச்சர் நாசர் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிறுமியின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அந்த சிறுமிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக அமைச்சர் உறுதியளித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில் சிறுமிக்கு வரும் செவ்வாய்க் கிழமை முக அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in